ஓய்வூதிய திட்ட கருத்து கேட்பு வரும் 12ம் தேதி கடைசி கூட்டம்
ஓய்வூதிய திட்ட கருத்து கேட்பு வரும் 12ம் தேதி கடைசி கூட்டம்
ADDED : செப் 09, 2025 05:40 AM

சென்னை : ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கடைசி கருத்து கேட்பு கூட்டம், வரும் 12ம் தேதி தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.
மத்திய அரசு உத்தரவின்படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பென்ஷன் திட்டங்களில் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய, அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, பல்வேறு கட்டங்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டு வருகிறது.
ஐந்தாம் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கடைசி கட்ட கருத்து கேட்பு கூட்டம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.
இக்குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு, 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. கூடுதலாக இரண்டு மாதம் அவகாசம் பெறவும் குழு முடிவு செய்துள்ளது.