கிளாம்பாக்கம் தொடர்பாக கடும் விவாதம் பிரச்னைகள் தீரும் என முதல்வர் உறுதி பிரச்னைகள் தீர்க்கப்படும் என முதல்வர் உறுதி
கிளாம்பாக்கம் தொடர்பாக கடும் விவாதம் பிரச்னைகள் தீரும் என முதல்வர் உறுதி பிரச்னைகள் தீர்க்கப்படும் என முதல்வர் உறுதி
ADDED : பிப் 13, 2024 11:46 PM
சென்னை:''கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பிரச்னைகளை சுட்டிக்காட்டினால், தீர்த்து வைக்க தயாராக இருக்கிறோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: தென் மாவட்ட மக்கள், கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னைக்குள் வர மிகுந்த சிரமப்படுகின்றனர். பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும்.
படிக்காதவர்கள் நிறைய பேர் வேலைக்காக வருகின்றனர். இதற்கு முன் இருந்தது போல, காலை நேரத்தில் மட்டுமாவது வெளியூர் பேருந்துகள் பயணியரை இறக்கி விட்டால் நல்லது.
அமைச்சர் சிவசங்கர்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தேர்வு செய்தது முந்தைய அ.தி.மு.க., அரசு. நீங்கள் ஆரம்பித்த திட்டத்தை, முழுமையாக நிறைவேற்றி, திறந்துள்ளோம்.
ஏற்கனவே பாரிமுனையிலிருந்து கோயம்பேடுக்கு பேருந்து நிலையத்தை மாற்றிய போது, பல்வேறு பிரச்னைகள் வந்தன. ஒரு மாற்றம் வரும் போது, ஆரம்பத்தில் தயக்கம் இருக்கும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் முழுமையாக ஏற்று, பயணித்து வருகின்றனர். பேருந்தில் பயணிக்காதவர்கள் தான் பிரச்னையாக கூறுகின்றனர்.
தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வடசென்னை மக்களுக்காக, மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து, 20 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், முழுமையாக செயல்படத் துவங்கி உள்ளது. மாநகர பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகின்றன.
அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு, மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சென்று வருகின்றனர். பேருந்து வசதி இல்லை என்பது தவறான தகவல்.
அமைச்சர் சேகர்பாபு: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என, எதிர்க்கட்சி தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலையம், 33 ஏக்கரில் அமைந்திருந்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 86 ஏக்கரில் அமைந்து உள்ளது.
கடந்த ஆட்சி பல்வேறு பணிகளை செய்ய தவறி விட்டது. அந்த பணிகளை, 100 கோடி ரூபாயில் செயல்படுத்தி உள்ளோம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, தினமும் 2,450 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையம் அமைக்க, 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க பணி துவக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டியதால், அவதுாறு கிளப்பி வருகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்துள்ளோம். அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நேரில் பார்த்து, தேவை என்ன என கூறுங்கள். முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவற்றை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது.
சிறு சிறு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து, தொலைநோக்கு பார்வையோடு பயன்பாட்டிற்கு வர, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அங்குள்ள சிறு சிறு பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்கிறோம். அவசரத்தில் திறந்து விட்டீர்கள். முழுமையான அடிப்படை வசதிகளை செய்து திறந்திருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது.
பயணியர் நடுரோட்டிற்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். பயணியருக்கு எவ்வித சிரமமும் இல்லாமல், பயணம் செல்ல ஏற்பாடு செய்து தர வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: அவசரப்பட்டு பேருந்து நிலையத்தை திறந்ததாக கூறுகிறீர்கள். நீங்கள் செய்ய தவறியதை, இந்த ஆட்சியில் செய்துள்ளோம்.
பழனிசாமி: பயணியர் கூறிய கருத்து அடிப்படையில், அறிக்கை அளித்தோம். கொரோனா காரணமாக ஓராண்டு பணி செய்யவில்லை.
எனவே, குறிப்பிட்ட காலத்தில் பணியை நிறைவு செய்ய முடியவில்லை. சிறு சிறு பிரச்னைகள் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். அதை சரி செய்ய வேண்டும் என்று தான் கூறுகிறோம்.
முதல்வர் ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் கூறியதுபோல் சிறு, சிறு பிரச்னைகள் மட்டுமல்ல, பெரும் பெரும் பிரச்னைகள் எல்லாம் இருந்தன; அதையும் தீர்த்து வைத்து தான் திறந்திருக்கிறோம்.
'இன்னும் ஏதேனும் பிரச்னை இருந்தால் சொல்லுங்கள். நேரடியாக வாருங்கள். அழைத்துச் செல்கிறோம். குறைகள் இருந்தால், நாங்கள் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம்' என அமைச்சர் சொல்லி இருக்கிறார். எனவே, இத்துடன் இந்த பிரச்னையை முடித்துக் கொள்ளவும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

