விருதுநகரில் ஜவுளி பூங்கா உள்கட்டமைப்பு பணிக்கு ரூ.437 கோடியில் 'டெண்டர்'
விருதுநகரில் ஜவுளி பூங்கா உள்கட்டமைப்பு பணிக்கு ரூ.437 கோடியில் 'டெண்டர்'
ADDED : ஆக 18, 2025 01:28 AM

சென்னை: நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, விருது நகர் மாவட்டத்தில், பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா அமைப்பதற்காக, 437 கோடி ரூபாய் செலவில், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, தமிழக அரசின் 'சிப் காட்' நிறுவனம், 'டெண்டர்' கோரி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில், 'பி.எம் .மித்ரா' எனப்படும், பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்காவை, 1,052 ஏக்கரில், 1,894 கோடி ரூபாயில் அமைக்க, தமிழக அரசுக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, தமிழக அரசு மற்றும் மத்திய ஜவுளி அ மைச்சகம் இடையே, 2023 மார்ச்சில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜவுளி பூங்கா வாயிலாக, 10,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், ஒரு லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கவும் திட்டமிடப் பட்டு உள்ளது. ஜவுளி துறையை சேர்ந்த நிறுவனங்கள், விரைவாக தொழில் துவங்க வசதியாக, 'பிளக் அண்டு பிளே' எனப்படும், தயார்நிலை தொழிற்கூடங்கள், 10,000 படுக்கைகளுடன் தங்குமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. ஜவுளி பூங்கா அமைக்கும் பணியை, 'சிப்காட்' எனப்படும், தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் மேற்கொள்கிறது.
மத்திய அரசிடம் இருந்து அனைத்து அனுமதிகளும் கிடைத்த நிலையில், ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் துவக்கப்படாமல் இருந்தன. அந்த பணிகள் விரைவாக துவக்கப்பட வேண்டும் என்பது, தொழில் துறையினரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து, நம் நாளிதழில், இம்மாதம், 8ம் தேதி விரிவாக செய்தி வெளியானது.
இதையடுத்து, விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில், பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்க, முதல் கட்டமாக, 437 கோடி ரூபாய் செலவில், கழிவுநீர் வெளியேற்றும் பணி, தண்ணீர் வினியோகம், மழைநீர் வடிகால் கால்வாய்களுடன் கூடிய சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'சிப்காட்' நிறுவனம் நேற்று, 'டெண்டர்' கோரி உள்ளது.