பகவத்கீதையை மதத்திற்குள் அடக்க முடியாது ;அது ஒரு நீதி நெறி புத்தகம்: ஐகோர்ட் உத்தரவு
பகவத்கீதையை மதத்திற்குள் அடக்க முடியாது ;அது ஒரு நீதி நெறி புத்தகம்: ஐகோர்ட் உத்தரவு
ADDED : டிச 22, 2025 10:59 PM

மதுரை : 'பகவத்கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடக்கிவிட முடியாது. அது பாரத நாகரிகத்தின் ஒரு பகுதி. அது ஒரு நீதிநெறி புத்தகம்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஆர்ஷ வித்யா பரம்பரா அறக்கட்டளை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், 'வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டப்படி பதிவு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திடம், எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தோம். பரிசீலிக்கவில்லை. சில கேள்விகள் எழுப்பப்பட்டன. மீண்டும் விண்ணப்பத்தும் நிராகரிக்கப்பட்டது. அதை ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிட்டது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீசரண் ரங்கராஜன் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் அறக்கட்டளை 2017ல் நிறுவப்பட்டது. இதன் நிறுவனர்கள் கோவை அர்ஷ வித்யா குருகுலத்தை சேர்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் சீடர்கள். உலகெங்கிலும் மாணவர்களுக்கு வேதாந்த அறிவை சமஸ்கிருத மொழியுடன் சேர்த்து கற்பித்தல், யோகா பயிற்சி, அத்துடன் பழங்கால ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கி பாதுகாத்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மத்திய அரசு தரப்பு, 'மனுதாரர் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகளை மீறியதால், அவர் பதிவு பெற தகுதியற்றவர்' என, தெரிவித்தது. 'மனுதாரர் முன் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு நிதி பெற்றுள்ளார். அந்நிதி மற்றொரு அமைப்பிற்கு நன்கொடையாக மாற்றப்பட்டுள்ளது.
மனுதாரர் அமைப்பின் தன்மை மத ரீதியானது,' எனக்கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது. விதிகள்படி, எந்தஒரு மத அமைப்பும் வெளிநாட்டு நன்கொடைகளை பெறலாம். அவ்வாறு செய்வதற்கு முன், மத்திய அரசிடமிருந்து அதற்கான பதிவுச்சான்று பெற வேண்டும். ஒரு குறிப்பிட்ட கலாசார, பொருளாதார, கல்வி, மத அல்லது சமூக திட்டத்தை கொண்ட எந்தவொரு நபரும், மத்திய அரசிடமிருந்து பதிவுச்சான்று பெறாத வரையில், வெளிநாட்டு நன்கொடைகளை பெறக்கூடாது என, விதி கூறுகிறது.
இதில், 'குறிப்பிட்ட' என்ற சொல் முக்கியத்துவம் வாய்ந்தது. மனுதாரர் சங்கம் மத அமைப்பாக தெரிகிறது என்று முடிவு செய்து, உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. மனுதாரரின் செயல்பாட்டின் தன்மை குறித்து அதிகாரிகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அப்பிரிவின் நோக்கம். 'குறிப்பிட்ட' என்ற சொல்லால் உணர்த்தப்படுவது அதுவே.
மனுதாரரின் அமைப்பு பகவத்கீதையில் உள்ள கருத்துக்களை பரப்புவதில் ஈடுபட்டுள்ளதால், அது ஒரு மத அமைப்பு என்ற முடிவிற்கு எப்.சி.ஆர்.ஏ., இயக்குனர் வந்துள்ளார். பகவத் கீதை ஒரு மத புத்தகம் அல்ல. மாறாக, அது ஒரு நீதிநெறி புத்தகம். ஒரு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம், 'பகவத் கீதையை தேசிய தர்ம சாஸ்திரமாக அங்கீகரிக்கலாம்' என, கூறியுள்ளது. அது அக மற்றும் நித்திய உண்மைகளை பேசுகிறது.
மகாத்மா காந்தி, மகரிஷி அரவிந்தர், லோகமான்ய திலகர் போன்ற சுதந்திர போராட்ட தலைவர்கள், காலனி ஆட்சிக்கு எதிராக போராட மக்களை தட்டி எழுப்ப பகவத்கீதையை மேற்கோள் காட்டினர் என்பதை அந்த தனி நீதிபதி குறிப்பிட்டார்.
இந்திய அரசியலமைப்பின் குறிப்பிட்ட பிரிவு, 'நம் சுதந்திர போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த உன்னத லட்சியங்களை பேணி பின்பற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்' என, கூறுகிறது. மற்றொரு பிரிவு பன்முக பண்பாட்டின் செழுமையான பாரம்பரியத்தை மதித்து பாதுகாப்பது பற்றி கூறுகிறது. எனவே, பகவத்கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடக்கிவிட முடியாது. அது பாரத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.
பகவத்கீதைக்கு பொருந்தக்கூடியது வேதாந்தத்திற்கும் பொருந்தும். யோகாவை பொறுத்தவரை, அதை மத கண்ணோட்டத்தில் பார்ப்பது ஒரு கொடூரமானது. அது ஒரு உலகளாவிய விஷயம். அமெரிக்க நீதிமன்றம்,' யோகா பயிற்சி என்பது உடலின் நெகிழ்வு தன்மையை அதிகரித்து, வலி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க மேற்கொள்ளப்படும் முற்றிலும் மதச்சார்பற்ற அனுபவம்' என, குறிப்பிட்டது. அது மற்றவர்களுக்கு ஆன்மிகமாகவும் இருக்கலாம். ஆன்மிகம் மற்றும் மதம் என்பவை ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தக்கூடிய சொற்கள் அல்ல.
ஒரு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் யோகாவைப் பற்றி ஒரு ஆய்வறிக்கையையே எழுதியுள்ளது. ஆரோக்கியமாக உடல், மனதை பராமரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், யோகா வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை ஒழுங்குபடுத்துகிறது என அது குறிப்பிட்டது. இவ்வழக்கில் மனுதாரரின் மனுவை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எப்.சி.ஆர்.ஏ., இயக்குனரின் விசாரணைக்கு மனு மீண்டும் அனுப்பப்படுகிறது. மனுதாரரின் விளக்கத்தை பெற்று புது உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.

