பா.ஜ., கூட்டணி வெற்றியை 'இரட்டை இலையால்' தடுக்க முடியாது
பா.ஜ., கூட்டணி வெற்றியை 'இரட்டை இலையால்' தடுக்க முடியாது
UPDATED : மார் 13, 2024 05:55 AM
ADDED : மார் 13, 2024 01:18 AM

திருச்சி:பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தமிழக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நமது நிருபருக்கு அளித்த 'கூல்' பேட்டி:
3வது அணியால் தி.மு.க.,வுக்கு சாதகமாகி விடாதா?
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை. குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர் பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது என்றும், எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். அவர் அளித்த வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்டவர்கள் தற்போது கோபத்தில் உள்ளனர்.
காவிரி குறுக்கே அணை கட்டும் கர்நாடகா அரசை நட்பு காரணமாக ஸ்டாலினால் கேள்வி கேட்க முடியவில்லை. முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் கேரளாவை தி.மு.க., அனுசரித்து செல்கிறது. போதைப்பொருள் கடத்தியவர்களை வைத்து கட்சி நடத்துகிறது.
ஊழல் இல்லாத சாதனை ஆட்சி நடத்தும் பா.ஜ., கூட்டணிக்கு தமிழகத்திலும் வெற்றி உறுதி.
விவசாயிகள் போராட்டம், தேர்தல் கமிஷனர் ராஜினாமா என அடுக்கடுக்காக பா.ஜ., மீது எழும் குற்றச்சாட்டுகள் தேர்தல் வெற்றியை பாதிக்காதா?
இவை தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் 'ஸ்டண்ட்'. எதிர்க்கட்சிகளால் எதையும் கூறி வாக்கு கேட்க முடியாது. எனவே இதுபோன்ற ஸ்டண்ட் அடிக்கின்றனர். அவர்களின் பாச்சா பலிக்காது.
கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட நிபந்தனை வைக்கப்பட்டதா?
சின்னம் குறித்து எந்த அழுத்தமும் இல்லை. கூட்டணி கட்சிகளை மிகவும் கண்ணியத்துடன் பா.ஜ., நடத்துகிறது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீது திடீர் பரிவு காட்டும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உங்கள் கூட்டணியை பின்னால் இருந்து ஒன்றிணைக்கிறாரா?
அவர் வழக்குகளை எதிர்கொள்ள கோர்ட்களுக்கு அதிகம் செல்லும் நிலை இருக்கிறது. அவரே அரசியலில் இருந்து விலகி இருப்பதாக கூறிவிட்டார்.
இரட்டை இலை சின்னம் உங்கள் கூட்டணி வெற்றியை பாதிக்குமா?
சின்னத்தை மட்டுமே பார்த்து மக்கள் வாக்களிப்பதாக இருந்தால் கடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் பழனிசாமியால் வெற்றி பெற முடியாமல் போனது ஏன். நாட்டுக்கு யார் நல்லது செய்வர் என்பதை நினைத்து புதிய வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதனால் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை கட்சி பழனிசாமி வசமும், சொத்துக்கள் உங்கள் வசமும் இருப்பதாக பேச்சு அடிபடுகிறதே?
என்னை 2011ல் கட்சியில் இருந்து நீக்கினர். பிறகு சித்தி(சசிகலா) மூலம் 2017ல் மீண்டும் கட்சியில் இணைந்தேன். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. ''யார் திருடினாரோ அவர் முன்னால் இருப்பவரை பார்த்து 'திருடன், திருடன்' என்று கத்திக் கொண்டே ஓடுவார்'' என்று கூறுவதுண்டு. கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்துக்கு யார் காரணமானவர்களோ அவர்கள் இதுபோன்ற பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
வாக்கு வங்கியை வைத்து பார்க்கும்போது 3வது அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறீர்களா?
தமிழக மக்கள் மிக புத்திசாலிகள். கடந்த முறை தேர்ந்தெடுத்து அனுப்பிய 38 எம்.பி.,க்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என உணர்ந்துள்ளனர். மத்தியில் பா.ஜ., மீண்டும் வரவேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர்.
இம்முறை ஆர்கே.நகர் 'பார்முலா' இருக்குமா?
அப்போதைய இடைத்தேர்தலில் ரூ.20 கொடுத்து வெற்றி பெற்ற பிறகு அந்த நோட்டை காண்பித்தால் ரூ.ஆயிரம் கொடுப்போம் என்று நாங்கள் கூறியதாக பொய் செய்தி பரப்பப்பட்டது. இதைத்தான் வெற்றியின் பார்முலா என்று சிலர் வதந்தி பரப்பினர். உண்மை அதுவல்ல. நாங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று நேரடியாக வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டது தி.மு.க.,வை அப்போது டெபாசிட் இழக்க வைத்தது. இந்த தேர்தலிலும் கடினமாக உழைப்போம்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து?
அவர் சுயலாபத்துக்காக ராஜதந்திரம் என்ற பெயரில் எதையும் செய்பவர். ஆட்சியை தக்க வைக்க உறுதுணையாக இருந்த பன்னீர்செல்வத்தையே வெளியேற்றியவர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குறித்து?
வெளிப்படையாக பேசுகிறார். அதிக புள்ளி விவரங்களை கட்சியின் வளர்ச்சிக்காக சேகரிக்கிறார். தன்னுடன் இருப்பவர்களை அனுசரித்து செல்கிறார். மொத்தத்தில் நான் என்னை பார்ப்பதுபோல உள்ளது அண்ணாமலையின் செயல்பாடுகள். இவ்வாறு அவர் கூறினார்.

