மாநகராட்சி, நகராட்சியில் பதிவு செய்த பொறியாளர்களை ஏற்க டி.டி.சி.பி., முடிவு
மாநகராட்சி, நகராட்சியில் பதிவு செய்த பொறியாளர்களை ஏற்க டி.டி.சி.பி., முடிவு
ADDED : மே 08, 2025 12:29 AM
சென்னை:மாநகராட்சி, நகராட்சிகளில் பதிவு செய்த பொறியாளர் உள்ளிட்ட தொழில்முறை வல்லுநர்களை ஏற்க, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கட்டுமான திட்டங்களில், பொறியாளர், கட்டட அமைப்பியல் பொறியாளர், நகரமைப்பு வல்லுநர்கள் உள்ளிட்ட, 12 வகை தொழில் முறை வல்லுநர்கள் பங்கேற்பது கட்டாயம்.
பொதுகட்டட விதிகளின் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., என்ற, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், டி.டி.சி.பி., என்ற, நகர் ஊரமைப்பு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், அவர்கள் பதிவு செய்வது கட்டாயம்.
இதில் முறைப்படி பதிவு செய்த பொறியாளர்கள் உள்ளிட்ட வல்லுநர்கள் மட்டுமே, கட்டுமான திட்ட விண்ணப்பங்களில் கையெழுத்திட முடியும். இவர்களின் கையெழுத்து இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படாது.
இந்நிலையில், டி.டி.சி.பி., - சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, நகராட்சிகளில் தொழில்முறை வல்லுநர்கள் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியுள்ளது. கட்டுமான திட்ட அனுமதிக்கு ஒற்றைசாளர முறை வந்துள்ள நிலையில், பொறியாளர் பதிவையும், 'ஆன்லைன்' முறையில் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, நகராட்சிகளில் பதிவு செய்த பொறியாளர்கள் உள்ளிட்ட வல்லுநர்களை, டி.டி.சி.பி.,யில் செயல்பட அனுமதிக்கலாம் என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுநர் சங்க தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
கட்டுமான திட்ட அனுமதி கோருவது உள்ளிட்ட பணிகளுக்கான, பொறியாளர் பதிவை ஒருங்கிணைப்பதில், அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பிற அமைப்புகளில் பதிவு செய்தவர்கள், டி.டி.சி.பி., திட்டங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
இதற்கான அரசாணை வரும்போது தான் கூடுதல் தெளிவு ஏற்படும். கட்டுமான திட்ட அனுமதியில், பொறியாளர் பதிவு காரணமாக ஏற்படும் காலதாதம் தவிர்க்கப்படும்.
ஏதாவது ஒரு அமைப்பில் பதிவு செய்தால் போதும்; அவர்கள் எதில் வேண்டுமானாலும் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என்ற, சூழல் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

