கூவமாக மாறும் தாமிரபரணி ஆறு: ஐகோர்ட் மதுரை கிளை வேதனை
கூவமாக மாறும் தாமிரபரணி ஆறு: ஐகோர்ட் மதுரை கிளை வேதனை
ADDED : செப் 24, 2024 06:13 PM

மதுரை: '' தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கவில்லை என்றால், அது கூவமாக மாறிவிடும் ,'' என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த காமராசு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், பி.புகழேந்தி கூறியதாவது: தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால், அது கூவமாக மாறும்.
ஆற்றில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கக்கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க வேண்டும். கழிவுநீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும்.
கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன வழி என்பது குறித்து பொதுப்பணித்துறையின் நெல்லை நீர்வள ஆதார பொறியாளர் வரும் 26 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றின் 84 மண்டலங்கள், படித்துறைகளை யார் பராமரிப்பது, பாதுகாப்பது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

