'தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் அதிகம்; பணவீக்கத்திலும் சராசரியை விட குறைவு!'
'தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் அதிகம்; பணவீக்கத்திலும் சராசரியை விட குறைவு!'
ADDED : பிப் 20, 2024 01:27 AM

சென்னை:''அரசின் வரி வருவாயை திரட்டுவதற்கான, அனைத்து முயற்சிகளும் தொழில்நுட்ப துணையுடன் எடுக்கப்பட்டு வருகின்றன. வரி ஏய்ப்பை தடுப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளோம்,'' என, நிதித்துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், சமீபத்தில் ஏற்பட்ட இரண்டு தொடர் இயற்கை பேரிடர்களால், இரண்டு விதமான சிக்கல்கள் ஏற்பட்டன. ஒன்று, மாநில சொந்த வரி வருவாயில் குறைவு ஏற்பட்டது. அடுத்து, நீண்ட கால வெள்ள நிவாரண கட்டமைப்புக்கும், குறுகிய கால நிவாரணத்திற்கும், அதிகச் செலவு செய்ய வேண்டியிருந்தது.
அப்படி இருந்தாலும், தமிழகத்தின் பொருளாதாரம் மிகவும் ஆரோக்கியமாகவே உள்ளது. அடுத்த ஆண்டு வரி வருவாய் அதிகம் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
ஏனெனில், அதற்காக அதிக சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. வரி ஏய்ப்பை தடுக்கவும், நிகழ் நேரத்தில் செய்திகளை பரிமாறி கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன வரி உயர்வு சமீபத்தில் அமலானது; அதிலும், நல்ல முன்னேற்றம் உள்ளது.
பொருளாதார நிபுணர்கள், 'ஒரு காலாண்டில் மோட்டார் வாகனங்கள் விற்பனை அதிகம் என்றால், அடுத்த காலாண்டில் வரி வருவாய் அதிகரிக்கும்' என்று கூறுவர்.
தமிழகத்தில் மோட்டார் வாகன விற்பனை மிகவும் திருப்திகரமாக உள்ளது. இரு சக்கர வாகனங்கள் விற்பனையை விட, கார் விற்பனை குறிப்பாக சொகுசு வாகன கார் விற்பனை நன்றாக உள்ளது.
வரி வருவாயை திரட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும், தொழில்நுட்பத்தின் துணையுடன் எடுத்து வருகிறோம். வரி ஏய்ப்பை தடுப்பதிலும் அரசு முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது.
நிதி மேலாண்மையை சீர்படுத்த, பி.எப்.டி.எஸ்., எனப்படும், பொது நிதி கண்காணிப்பு அமைப்பு என்ற தொழில்நுட்ப ரீதியான தீர்வை, அரசு உருவாக்கியுள்ளது. இதற்கு முன் நிதி, கரூவூலத்தில் இருந்து ஒவ்வொரு துறை அலுவலகத்திற்கும், செயல்படுத்தும் அமைப்பிற்கும் விடுவிக்கப்படும்.
நிதி செயலாக்கம் எப்படி இருந்தாலும், அங்கேயே நிதி தேங்கி இருக்கும். ஒவ்வொரு வங்கியிலும் தேங்கியிருக்கும் நிதி, சில ஆயிரம் கோடிகளை எட்டியது. புதிய முறையால், 36 முக்கிய திட்டங்களில் அரசு நிதியை விடுவிப்பதில் இருந்து, பயனாளிகளின் வங்கி கணக்கில் அந்நிதி சென்று சேரும் வரை கண்காணிக்க முடியும்.
இதனால், திட்டங்களை செயல்படுத்தும் வேகத்திற்கு ஏற்றார் போல, அரசு நிதி விடுவிக்கப்படும். நிகழ்நேரத்தில், ஒரு லட்சம் வங்கி கணக்குகளில், அரசு நிதி தேங்கி இருப்பதை கண்டறிய முடியும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் திட்டங்கள் சென்று சேர வேண்டும், அனைத்து மக்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்குடன், பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.
தேசிய சராசரியை விட, தமிழக வளர்ச்சி விகிதம் அதிகம். பணவீக்க விகிதத்திலும் தேசிய சராசரியை விட, தமிழகத்தில் குறைவு.
இவ்வாறு அவர் கூறினார்.

