'நபார்டு' வங்கியிடம் ரூ.2,000 கோடி கடன் கேட்கிறது தமிழகம்
'நபார்டு' வங்கியிடம் ரூ.2,000 கோடி கடன் கேட்கிறது தமிழகம்
ADDED : டிச 18, 2025 03:38 AM
சென்னை: பயிர் கடன் வழங்குவதற்காக, 'நபார்டு' வங்கியிடம், 2,000 கோடி ரூபாய் கேட்டுள்ளது, தமிழக கூட்டுறவு துறை.
கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப் படுகிறது.
இதற்கான, 7 சதவீத வட்டியை, விவசாயிகள் குறித்த காலத்திற்குள் செலுத்தி விட்டால், வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில், 17,000 கோடி ரூபாய்க்கு பயிர் கடன் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, 'நபார்டு' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் இருந்து, 10,000 கோடி ரூபாயை, கூட்டுறவு துறை கடனாக கேட்டது. அதில், 3,800 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இந்தாண்டில் இதுவரை மாநிலம் முழுதும் உள்ள, 9 லட்சம் பேருக்கு, 11,000 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, 2,000 கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, நபார்டு வங்கியிடம், கூட்டுறவு துறை மீண்டும் கேட்டு உள்ளது.

