ADDED : டிச 17, 2024 05:44 AM

சென்னை:புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பம் செய்வது, மின் கட்டணம் செலுத்துவது உட்பட, தமிழக மின் வாரியத்தின் அனைத்து சேவைகளையும், புதிய இணையதள முகவரியில் மட்டுமே இனி பெற முடியும்.
தமிழகம் முழுதும் மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மேற்கொள்கிறது.
மின் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பது, மின் இணைப்பு பெயர் மாற்றம் என, மின் வாரியத்தின் அனைத்து சேவைகளும், www.tangedco.org என்ற இணையதளம் வழியே நடந்து வந்தன.
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது, தமிழக மின் பகிர்மான கழகம், தமிழக மின் உற்பத்தி கழகம், தமிழக பசுமை எரிசக்தி கழகம் போன்ற நிறுவனங்களாக இந்தாண்டு துவக்கத்தில் பிரிக்கப்பட்டது.
இதற்கு, மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம், கடந்த ஜூலையில் ஒப்புதல் அளித்தது. இந்த நிறுவனங்கள் தனித்தனி பெயரில் செயல்பட்டு வருகின்றன.
தற்போது மின் வாரிய இணையதள முகவரி, www.tnpdcl.org என, மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, இந்த இணையதள முகவரியில் தான், மின் வாரியத்தின் அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

