காது - தாடைக்கு இடையில் வீக்கமா? அலட்சியப்படுத்த வேண்டாம்!
காது - தாடைக்கு இடையில் வீக்கமா? அலட்சியப்படுத்த வேண்டாம்!
ADDED : அக் 29, 2024 04:19 AM
சென்னை: தமிழகத்தில், 'மம்ப்ஸ்' என்ற பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பு ஏற்படுத்தி வருவதால், காதுகள் மற்றும் தாடைக்கு இடையே வீக்கம் ஏற்பட்டால், அலட்சியப்படுத்த வேண்டாம் என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
'மம்ப்ஸ்' என்ற வைரஸ் வாயிலாக பரவும் பொன்னுக்கு வீங்கி நோய், காதுகள் மற்றும் தாடைக்கு இடையே வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
தீவிர பாதிப்பு
உமிழ்நீர் சுரப்பிகளில் வீக்கம் உருவாவதால், கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும்.
இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, கபம், சளி மற்றும் நெருக்கமான தொடர்பு வாயிலாக பரவும். இவை தானாகவே குணமடைந்தாலும், சிலருக்கு மூளைக்காய்ச்சல், விரை வீக்கம் போன்ற தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி நோயால், 2021ல் இருந்து இதுவரை, 1,300 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்; 2021ல் ஒரு லட்சம் பேரில், 0.37 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர்.
தற்போது, 1.3 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வருங்காலங்களில் இந்நோய் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உடனடி சிகிச்சை
எனவே, தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடலில், நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக தண்ணீரும், திரவ உணவுகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். டாக்டரின் பரிந்துரைப்படி வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தற்போது வரை அச்சப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லையென்றாலும், காதுகள் - தாடைக்கு இடையே வீக்கம் இருந்தால், அலட்சியப்படுத்தாமல் உடனடி சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

