பழனிசாமி சுற்றுப்பயணம் சென்ற 173 தொகுதிகளில் 'சர்வே' பணி துவக்கம்
பழனிசாமி சுற்றுப்பயணம் சென்ற 173 தொகுதிகளில் 'சர்வே' பணி துவக்கம்
ADDED : நவ 11, 2025 12:50 AM

'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி 173 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த நிலையில், அத்தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது' என, 'சர்வே' எடுக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணம் என்ற பெயரில், கடந்த ஜூலை 7ம் தேதி தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி துவக்கினார்.
முதல் கட்டமாக, மேற்கு மண்டலத்தில் பயணத்தை துவக்கிய பழனிசாமி, 10,000 கி.மீ., துாரத்திற்கு மேல் பிரசார பஸ்சில் பயணம் செய்து, 173 தொகுதிகளை வலம் வந்தார்.
அனைத்து தொகுதிகளிலும் மக்களை சந்தித்தார். குறிப்பாக விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் ஆகியோருடன், 200க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்று, அவர்களின் பிரச்னைகளை, குறைகளை கேட்டறிந்தார்.
அதேபோல் பொதுக் கூட்டங்கள் வாயிலாக, லட்சக்கணக்கான மக்களை சந்தித்த பழனிசாமி, தி.மு.க., ஆட்சியின் அவலங்கள், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள், நிறைவேற்றாத வாக்குறுதிகள், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள், வரும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளை வழங்கி பேசினார்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவான பின், பழனிசாமி சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில், அக்கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைக்கும் நிறுவனம் சார்பில், 'சர்வே' எடுக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய், பொங்கலுக்கு மீண்டும் 2,500 ரூபாய், தீபாவளிக்கு பட்டுச்சேலை என, பழனிசாமி கொடுத்த வாக்குறுதிகள், பொதுமக்களிடம் பேசுபொருளாகி உள்ளன.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கொங்கு மண்டலம், வட மண்டலம் அ.தி.மு.க.,வுக்கு கைகொடுத்தன; மத்திய மண்டலம், தென் மண்டலத்தில் பின்னடைவு ஏற்பட்டன. அவற்றை சரிக்கட்டும் வேலையில் பழனிசாமி ஈடுபட்டுள்ளார்.
அதற்கு முன், சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளின் சர்வே அடிப்படையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுஉள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

