'நெல் கொள்முதலில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை'
'நெல் கொள்முதலில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை'
ADDED : பிப் 02, 2024 11:24 PM
சென்னை:''நெல் கொள்முதலில் முறைகேடு நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மண்டல முதுநிலை மேலாளர்களும், மண்டல மேலாளர்களுமே பொறுப்பேற்க வேண்டும்,'' என, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
உணவுத்துறை ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம், நேற்று சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், புதிதாக துவக்கப்பட்ட ஆறு மண்டலங்களின் பயன்பாட்டிற்காக, 61.93 லட்சம் ரூபாயில் கொள்முதல் செய்யப்பட்ட ஏழு ஜீப்களை, அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நெல் கொள்முதல் நிலையங்கள், எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் செயல்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில், நெல் கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்து, உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும்.
நெல் கொள்முதலில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு அந்த மண்டல முதுநிலை மேலாளர்களும், மண்டல மேலாளர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், உணவுத்துறை செயலர் கோபால், கமிஷனர் ஹர்சகாய் மீனா, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பழனிசாமி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

