நெல்லையப்பர் கோவில் நிலத்தில் வணிக வளாகம் எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலை தொடர உத்தரவு
நெல்லையப்பர் கோவில் நிலத்தில் வணிக வளாகம் எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலை தொடர உத்தரவு
ADDED : ஜூன் 19, 2025 10:58 PM
சென்னை:'திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையில், தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், கோவில் நிதியில் வணிக வளாகம் கட்ட, 2024 செப்டம்பர், 16ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது; பின், 'டெண்டர்' அறிவிப்பு வெளியானது.
விசாரணை
இதை எதிர்த்து, சென்னை மயிலாப்பூரை சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்; மனு விபரம்:
கோவில் நிலத்தில், கோவில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட முடியாது. அதை மீறுவது, ஹிந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு எதிரானது.
கோவிலுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட வேண்டும். சிதிலமடைந்துள்ள பல கோவில்கள் சீரமைக்கப்பட வேண்டும்.
இவற்றில் கவனம் செலுத்தாமல், வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் ஆஜராகி, ''கோவில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட, அறநிலையத்துறை சட்ட விதிகள் அனுமதிக்கவில்லை என, கடந்த ஜனவரியில், உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
அவகாசம்
''அந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. எனவே, நெல்லையப்பர் கோவில் நிதியில், வணிக வளாகம் கட்டுவது தொடர்பான அரசாணையை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அறநிலையத்துறை சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், ''மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்,'' என்று கேட்டார். அதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு அறநிலையத்துறை பதிலளிக்க கூறி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். மேலும், 'வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையில், தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர்.
ரூ.1,000 கோடி
இதேபோல, அறநிலையத்துறை சட்ட விதிகளை மீறி, சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பு என்ற பெயரில், கோவில் நிலத்தில், கோவில் நிதி 1,000 கோடி ரூபாயை பயன்படுத்தி, திருமண மண்டபங்கள், கலாசார மையங்கள், நிர்வாக கட்டடங்கள் கட்டும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டி.ஆர்.ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, 'கோவில் நிலங்களில், இதுபோன்ற கட்டுமானங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
கோவில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக, இந்த நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது' எனக் கூறி, 'இப்பணிகளிலும் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

