மோடி வருகையால் பள்ளிவாசல் மறைப்பு சர்ச்சை பின்னணி அறியாமல் கண்டன அறிக்கைகள்
மோடி வருகையால் பள்ளிவாசல் மறைப்பு சர்ச்சை பின்னணி அறியாமல் கண்டன அறிக்கைகள்
ADDED : ஏப் 04, 2025 09:14 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பள்ளிவாசல் மினாரில் இருந்த 'அல்லாஹு அக்பர்' என்ற வாசகம் மீது மூடப்பட்டிருந்த தார்பாயை பள்ளிவாசல் நிர்வாகம் அகற்றியது.
பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகில் ஜாமியா மஜீத் பள்ளிவாசல் உள்ளது. இதில் 110 அடி உயரத்தில் மினார் (கோபுரம்) உள்ளது. சமீபத்தில் இந்த மினாரில் 'அல்லாஹு அக்பர்' எனும் எழுத்து பொறிக்கப்பட்டது. மின்னொளியில் ஜொலித்தது.
நேற்று முன்தினம் இந்த எழுத்தை தார்பாய் மூலம் மூடி மறைத்தனர். மோடி ராமேஸ்வரம் வருவதையொட்டி அரசு உத்தரவால் இது மூடப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு சிலர் அரசியலாக்கினர். அன்று மதியமே பள்ளிவாசல் நிர்வாகம் தார்ப்பாயை அகற்றி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதுகுறித்து ஜமாத் தலைவர் முகமது ஹனிபா கூறுகையில், ''பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு ஏப்., 18ல் திறப்பு விழா நடக்க உள்ளது. இதற்காக மினாரில் சாரம் கட்டி வர்ணம் பூசப்பட்டது. பணி நடக்கும்போது 'அல்லாஹு அக்பர்' எழுத்துகள் சேதமடையக்கூடாது என்பதற்காக தார்பாயால் மூடினோம். இதை படம் பிடித்த சிலர், அதை அப்படியே சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மொத்த பள்ளிவாசலையும் மூடிவிட்டது போன்றதொரு தகவலையும் பரப்ப, அது சர்ச்சையாகி விட்டது. பா.ஜ.,வினர் மெனக்கெட்டு, மிரட்டி இப்படியொரு காரியத்தை செய்ய வைத்தது போலவும் தகவல் பரப்பி விட்டனர். ஒரு சிலர், தி.மு.க., அரசு போலீசை வைத்து, இப்படியொரு காரியத்தை செய்தது போலவும் செய்தி பரப்பினர். சர்ச்சைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க விரும்பினோம். அதனால், பணி முடியும் முன்பாகவே, தார்ப்பாயை அங்கிருந்து அகற்றி விட்டோம்,'' என்றார்.
இந்த விபரம் தெரியாத அரசியல் தலைவர்கள், வழக்கம் போல பா.ஜ., தான் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருக்கிறது எனக் கருதி, கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
* நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:
புதிதாக கட்டப்பட்டுள்ள, பாம்பன் ரயில் பாலத்தை திறந்துவைக்க, பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருகிறார். அதற்காக, அங்குள்ள நுாற்றாண்டு பழமையான பள்ளிவாசலை, துணியால் மூடி மறைப்பது கண்டனத்திற்குரியது. பிரதமர் அரபு நாடுகளுக்கு செல்லும்போது, அங்குள்ள பள்ளிவாசல்களை மூட முடியுமா? உள் நாட்டிற்கு வருபோது மட்டும் அதை மறைப்பது, அப்பட்டமான பாசிச மனநிலை. பள்ளிவாசலை மறைப்பது, பா.ஜ., அரசின் விருப்பமா அல்லது தி.மு.க., அரசின் முடிவா?
யாருக்கு பயந்து, யாரை மகிழ்விக்க, தி.மு.க., அரசு மசூதியை மூடுகிறது. பிரதமர் வருகைக்காக பள்ளிவாசலை மூடுகிற பழக்கம் இதுவரை இல்லை. பள்ளிவாசல் விளக்கு, கலங்கரை விளக்கம்போல் தெரிந்த, தமிழக காவல்துறைக்கு, கோவில் விளக்கு அப்படி தெரியாமல் போனது ஏன்? இவை தான், தி.மு.க., கட்டிகாக்கும் சமத்துவமா; கடைபிடிக்கும் சமூக நீதியா; சனாதனத்தை எதிர்க்கும் முறையா?
* தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா: ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை, நாளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி பாம்பன் பள்ளிவாசல் மினாரை, தார்ப்பாய் போட்டு தி.மு.க., அரசு மூடியுள்ளது. 'அல்லாஹூ அக்பர்' என பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தை நீக்க வேண்டும் என, பள்ளிவாசல் நிர்வாகத்தை, அரசு அதிகாரிகள் மிரட்டி உள்ளனர்.
பிரமர் வருகையையொட்டி, பாம்பன் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு, தி.மு.க., அரசு நெருக்கடி கொடுத்துள்ளது. பொது தளத்தில் பா.ஜ.,வை எதிர்ப்பதுபோல் நாடகம் நடத்திவிட்டு, திரைமறைவில் பா.ஜ.,வுடன் கள்ள உறவு வைத்துக் கொள்வது, தி.மு.க.,வுக்கு வாடிக்கை என்பது, இந்த விவகாரத்தில் வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

