மனைவி சொல்வதை கேட்கும் ஸ்டாலின் கோவில் கும்பாபிஷேகத்துக்கு செல்லலாமே?
மனைவி சொல்வதை கேட்கும் ஸ்டாலின் கோவில் கும்பாபிஷேகத்துக்கு செல்லலாமே?
ADDED : டிச 20, 2025 03:39 AM

கோவை: ''ஹிந்துக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றால், அதற்கான விலையை ஸ்டாலின் அரசு கொடுக்க நேரிடும்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி:
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்து நீதிமன்றத்தில், முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தி.மு.க., அரசு கூறி வருகிறது. ஹிந்துக்களின் உணர்வை தொடர்ந்து புண்படுத்தி வருகிறார், முதல்வர் ஸ்டாலின்.
தன் மனைவி சொல்வதை கேட்பதாக ஸ்டாலின் சொல்கிறார். ஆயிரம் கோவில் கும்பாபிஷேகங்களுக்கு செல்லும் அவரது மனைவி, ஒரு கோவில் கும்பாபிஷேகத்துக்கு கூட செல்லுமாறு ஸ்டாலினிடம் சொல்லவில்லையா? ஹிந்துக்களின் உணர்வுகளை மதிக்காவிட்டால், அதற்கான விலையை ஸ்டாலின் அரசு கொடுக்க நேரிடும்.
காந்திக்கும், தி.மு.க., வுக்கும் தொடர்பே இல்லை. தி.மு.க., அரசு, எத்தனை திட்டங்களுக்கு காந்தி பெயரை வைத்துள்ளது? அறிவாலயத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதில்லை. காந்தி பெயரிலான வேலைவாய்ப்பு திட்டத்தில் அதிக ஊழல் செய்த மாநிலங்களில், தி.மு.க., ஆளும் தமிழகமும் ஒன்று.
தி.மு.க., அரசில் யாரெல்லாம் ஊழல் செய்கின்றனரோ, அவர்களெல்லாம் சிறைக்குள் போகப் போகின்றனர்.
ஈரோட்டில் பேசிய த.வெ.க., தலைவர் விஜய், மஞ்சள் நகரம் என புதிதாக கண்டுபிடித்து இருக்கிறார். ஆனால், மஞ்சளுக்கு தனி வாரியத்தையே மத்திய பா.ஜ., அரசு அமைத்துள்ளது. அவர் தி.மு.க.,வை எதிர்ப்பதை வரவேற்கிறோம். ஆனால், தி.மு.க.,விற்கும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கும் தான் போட்டி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

