மேற்கு தொடர்ச்சி மலை கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா; அறநிலையத்துறை செயல்படுத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா; அறநிலையத்துறை செயல்படுத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 11, 2025 12:21 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
திருக்குறுங்குடி நம்பி கோயில், பாபநாசத்தில் சொரிமுத்து அய்யனார் கோயில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் செண்பகத் தோப்பு காட்டழகர் கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர்கோயில், கண்ணகி கோயில், திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்கிரி கோயில்கள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ளூர், அந்தந்த மாவட்ட மக்களே இத்தகைய மலைக்கோயில்களுக்கு சென்று வந்தனர்.
தற்போது வெளி மாவட்டம், வெளி மாநிலம் கடந்து வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் மலைக்கோயில்களுக்கு வந்து செல்கின்றனர். ஆனால், இதில் பல கோயில்களுக்கு போதிய போக்குவரத்து வசதியோ, அடிப்படை வசதிகளோ கிடையாது. சதுரகிரி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் சீரமைப்பு அறவே கிடையாது. உருண்டுகிடக்கும் பாறைகள் மீது தான் பக்தர்கள் ஏறி செல்ல வேண்டும். மலைப்பாதையில் எங்கும் கழிப்பறை வசதி கிடையாது.
இது போன்ற நிலைதான் பல கோயில்களிலும் உள்ளது. ஆனால் வனத்துறை சார்பில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே மலைப்பாதைகள், கோயில்களில் அடிப்படை வசதி செய்து தர வனத்துறையும் அறநிலையத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.
வனத்துறை சார்பில் 40 இடங்களில் மலையேற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது போல் அறநிலையத்துறை சார்பில் மலைக்கோயில்களுக்கு பக்தர்களை அழைத்துச்செல்ல ஆன்மிக சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

