பேச்சு, பேட்டி, அறிக்கை: பட்ஜெட் கூட்டத் தொடரில் செங்கோலுக்கு முக்கியத்துவம்
பேச்சு, பேட்டி, அறிக்கை: பட்ஜெட் கூட்டத் தொடரில் செங்கோலுக்கு முக்கியத்துவம்
ADDED : பிப் 02, 2024 01:12 AM

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: புதிய பார்லிமென்டில், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரை பாராட்டுக்குரியது. கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த ஜனாதி பதிக்கு, தமிழ் பாரம்பரிய முறையான செங்கோல் கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. செங்கோலுக்கு முக்கியத்துவம் அளித்து, அதன் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.
கண்டிப்பாக... தமிழகத்துக்கு மத்திய அரசு மேலும் மேலும் பெருமை சேர்த்து வருகிறது என்பதில் மாற்று கருத்தே இல்லை!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'லோக்சபா தேர்தலில் மீண்டும் மோடி வெற்றி பெற்றால், இந்திய அரசியல் சாசனம் இருக்காது. உச்ச நீதிமன்றம் இருக்காது. லோக்சபா, சட்டசபைக்கு வேலை இருக்காது. அதிபர் ஆட்சி முறையே நடக்கும்' என, தி.மு.க., எம்.பி., ராசா தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் சாசனத்தை எரித்தவர்கள், தங்களுக்கு சாதகமான தீர்ப்பு இல்லை என்றபோது, உச்ச நீதிமன்றத்தை உச்சிக் குடுமி மன்றம் என்றவர்கள், இப்படி விமர்சிப்பது வேடிக்கை மட்டுமல்ல. வெட்கக்கேடும் கூட. முறைகேடுகளின் மொத்த உருவமான இவர்களுக்கு, அதிபர் ஆட்சி முறை என்றால் அச்சம் வரத்தான் செய்யும்.
அது சரி... 'இந்தியாவில் எக்காலத்திலும் அதிபர் ஆட்சி முறை வராது' என்று அடித்து சொல்லாமல் இருப்பதும், அவங்களது அச்சத்தை அதிகரிக்கவே செய்யும்!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக, அறிக்கைகளை வெளியிட்ட ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்ற பின், அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயங்குவது ஏன்?
எதிர்க்கட்சியா இருக்கிறப்ப, கஜானா சாவி அவரிடம் இல்லையே... இப்ப, கஜானாவின் கதி தெரிஞ்சதால கமுக்கமா இருக்கார்!
தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன் அறிக்கை: 'கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு தி.மு.க., அரசின் அலட்சியம் காரணம்' என, பா.ம.க.,வினர் கூறுகின்றனர். 2006ல், துணை நகரம் திட்டம் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்டிருந்தால், இந்த பிரச்னையை கிளாம்பாக்கத்தில் எதிர்கொண்டிருக்க மாட்டோம். துணை நகரம் திட்டத்தை எதிர்த்தவர்கள், இப்போது தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் போல பேசுவது வெட்கக்கேடானது.
லோக்சபா தேர்தல்ல போட்டியிட சீட் கேட்டிருப்பாரோ... இப்படி, ஆளுங்கட்சிக்கு வக்காலத்து வாங்குறாரே!

