ADDED : நவ 19, 2025 06:32 AM

நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட மத்திய அரசு பாடத்திட்ட பள்ளிகள், அனைத்து மாநில பாடத்திட்ட பள்ளி களில், முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை, மூன்று மாதங்களுக்குள் சைகை மொழி பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என, சி.சி.பி.டி., எனும், மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:
ஆறு முதல், 20 வயதுடைய மாற்றுத்திறனாளிகளில், 20 சதவீதம் பேர் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோராக உள்ளனர்.
அவர்களுக்கான கற்றல் வாய்ப்பை வழங்கும் வகையில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை, ஐ.எஸ்.எல்., எனும், 'இண்டியன் சைன் லாங்க்வேஜ்' பாடத்தை நடத்த வேண்டியது கட்டாயம் என, சி.சி.பி.டி., பரிந்துரைத்துள்ளது.
முக்கியமாக, புதிய கல்வி கொள்கையின்படி, இந்திய சைகை மொழி பாடத்தை, சிறப்பு பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும். அதற்கேற்ப, மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும்.
இந்த பணியில், என்.சி.இ.ஆர்.டி., தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம், இந்திய மறுவாழ்வு கவுன்சில் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்.
அதை கற்பிக்கும் வகையில், செவித்திறன் குறைபாடு உள்ளோருக்கான சிறப்பு கல்வி முடித்தோரை, மாணவர்களின் விகிதத்தின் அடிப்படையில், ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்.
மேலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், ஐ.எஸ்.எல்.,க்கான பி.எட்., - டி.எட்., இடங்களை அதிகரிக்க வேண்டும் என, சி.சி.பி.டி., உத்தரவிட்டுள்ளது.
எனவே இந்த விஷயத்தில் மத்திய கல்வி அமைச்சகம் துரிதமாக செயல்பட வேண்டும் .
இவ்வாறு கூறினர்.
- நமது நிருபர் -

