ADDED : பிப் 19, 2024 05:01 AM
சென்னை : 'சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில், 20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேருவோருக்கு, 7 ஆண்டுகளில் முதல்நிலை காவலர் பதவி வழங்கப்படும்; பத்தாண்டுகளில் தலைமை காவலர்களாகவும், 20 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ.,க்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும் என, உறுதிஅளிக்கப்பட்டு இருந்தது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், பல்வேறு நிலைகளில் காவலர்களாக பணியாற்றி வந்தவர்கள், தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்த்தனர்.
ஆனால், இன்று வரை பதவி உயர்வு குறித்த, அவர்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றவில்லை. எனவே, இந்த வாக்குறுதியை நிறைவேற்றினால், 15,000 பேருக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு கிடைக்கும்.
சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில், காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

