மானிய வீடு கட்டித் தரணுமா? நில உரிமை இருந்தால் தான் உண்டு!
மானிய வீடு கட்டித் தரணுமா? நில உரிமை இருந்தால் தான் உண்டு!
ADDED : அக் 02, 2024 10:55 PM
சென்னை:'மானிய திட்டத்தில் வீடு பெறும் பயனாளிகள் பெயரில் நில உரிமை இருப்பதை, அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்' என, மத்திய அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளதால், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இரண்டாம் பாகம்
பிரதமரின் வீட்டுவசதி திட்டம், 2015ல் துவக்கப்பட்டது. இதில், 1.18 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதுவரை, 85.5 லட்சம் வீடுகள் கட்டி முடித்து, பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தற்போது, இத்திட்டத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்பில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 1 கோடி வீடுகள் கட்டப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கான விதிமுறைகளை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. திட்டத்தின் முதல் பாகத்தை விட, இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சில புதிய நிபந்தனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஏழை மக்களுக்கான வீட்டுவசதி திட்டங்களில், பயனாளிகள் பெயரில் நில உரிமை இருப்பதை, பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் வாயிலாக, மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், பயனாளிகளே வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தில், அவர்கள் பெயரில் நில உரிமை இருப்பதை, பட்டா வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும் என, மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
மானியம்
தமிழகத்தில், பல்வேறு பகுதிகளில், வாரியம் வழங்கிய மனைகளில் வசிக்கும் மக்கள், இத்திட்டத்தில் பயன்பெற வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களிடம் மனை ஒதுக்கீட்டுக்கான ஆவணம் மட்டுமே இருக்கும்; அதற்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இருக்காது.
பயனாளிகள் பெயரில் உள்ள பட்டா உள்ளிட்ட ஆவணங்களை காட்டினால் தான், வீடு கட்டுவதற்கான மானியம் தரப்படும் என்ற நிபந்தனையால், பல்வேறு நடைமுறை பிரச்னைகள் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

