ADDED : டிச 13, 2024 01:18 AM
சென்னை:அரசு மருத்துவமனைகளில் ஆறு மாதங்களாக, மஞ்சள் காமாலைக்கான, 'ஹெபடைடிஸ் - பி' தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் கூறியதாவது:
'ஹெபடைடிஸ் - பி' தடுப்பூசி, மஞ்சள் காமாலை, 'பி வைரஸ்' தொற்றை தடுப்பதுடன், அது தொடர்பான கல்லீரல் நோய்கள் மற்றும் புற்றுநோயையும் தடுக்கும். அரசு மருத்துவமனைகளில், மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசிக்கு ஆறு மாதங்களாக தட்டுப்பாடு உள்ளது.
சிறுநீரக மருத்துவ பிரிவுகளில், 'ஹீமோ டயாலிசிஸ்' என்ற ரத்த சுத்திகரிப்பு செய்து கொள்ளும் நோயாளிகளுக்கும், இந்த தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் போதிய அளவு மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசி வழங்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கான, ஹெபடைடிஸ் - பி தடுப்பூசிகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. ஆனால், பெரியவர்களுக்கான தடுப்பூசி கிடைப்பதில்லை. இந்த தடுப்பூசிகளை மத்திய அரசு தான் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

