குறுகிய துார ரயில்கள் மீண்டும் சாதாரண கட்டணத்தில் இயக்கம்
குறுகிய துார ரயில்கள் மீண்டும் சாதாரண கட்டணத்தில் இயக்கம்
ADDED : பிப் 27, 2024 11:10 PM
சென்னை:கொரோனா பாதிப்புக்கு பின், நான்கு ஆண்டுகளாக விரைவு கட்டணத்தில் இயக்கப் பட்ட, 324 குறுகிய துார ரயில்களை, மீண்டும் சாதாரண கட்டணத்தில் இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்த பின், தெற்கு ரயில்வேயில், 324 குறுகிய துார ரயில்கள், சாதாரண கட்டண முறைக்கு பதிலாக விரைவு ரயில் அல்லது சிறப்பு ரயில் கட்டணத்தில் இயக்கப் பட்டன. இதனால், குறைந்தபட்ச கட்டணமாக, 30 ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.
இதற்கிடையே, குறுகிய துார ரயில்களில் விரைவு கட்டண முறை உடனடியாக நீக்கப்பட்டு, சாதாரண கட்டண முறை அமல்படுத்த தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம், அனைத்து கோட்டங்களுக்கும் வாய்மொழி உத்தரவாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, குறைந்த பட்ச கட்டணம், 30 ரூபாயில் இருந்து, 10 ரூபாய் என்று மாற்றப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ரயில் பயணியர் கூறியதாவது: தெற்கு ரயில்வே எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் பயனடைவர். இருப்பினும், இந்த அறிவிப்பு தேர்தல் நேர அறிவிப்பாக இல்லாமல், தொடர்ந்து இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ரயில்வே வாரியத்தின் உத்தரவை தொடர்ந்து, தெற்கு ரயில்வேயில், அதிகபட்சமாக 200 கி.மீ., துாரம் வரை இயக்கப்படும் குறுகிய துார ரயில்களில் சாதாரண கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு தொடரும்' என்றனர்.

