விழிகளில் வழியும் கண்ணீரை துடைப்பதே சைவ சமயம்: பொன்னம்பல அடிகளார்
விழிகளில் வழியும் கண்ணீரை துடைப்பதே சைவ சமயம்: பொன்னம்பல அடிகளார்
ADDED : மே 04, 2025 12:15 AM
“விழிகளில் வழியும் கண்ணீரை துடைப்பது தான் உண்மை சமயம்; அது, சைவ சமயம்,” என, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.
அவர் பேசியதாவது:
எவருக்கும் கிடைக்காத மரணத்தை தள்ளிப் போடுகிற மாமருந்தான நெல்லிக்கனி, அதியமானுக்கு கிடைத்தது. தமிழ் இந்த மண்ணில் வாழ வேண்டும் என்பதற்காக, அதியன் அதை உண்ண விரும்பாது, அவ்வைக்கு தந்தான்.
சைவம் என்பது தத்துவம் மட்டுமல்ல; வாழ்க்கை முறை. வாழ்க்கை, மனைவி, மக்கள், உறவுகள், சுற்றம், நட்பு என எல்லாம் பொய். வீட்டை விட்டு ஓடு; இடுகாட்டை நோக்கி ஓடு என, புறநெறிகள் இங்கு படையெடுப்புகள் நடத்தின. என் வாழ்க்கை எப்படி பொய்யாகி போகும்?
எனக்காக இன்பத்தில், துக்கத்தில், நன்மையில், தீமையில், வாழ்வில், தாழ்வில், ஏற்றத்தில், இறக்கத்தில், அழுதும், சிரித்தும், மகிழ்ந்தும் இருந்த வாழ்க்கை துணைநலம் எப்படி பொய்யாகி போகும் என கேட்டது தான், சைவ சமயத்தின் சாரம். வாழ்வதற்கான வாழ்க்கை என, சைவ சித்தாந்தம் கூறுகிறது.
'மருது சகோதரர்கள் சரணடையவில்லை எனில், காளையார்கோவில் ராஜகோபுரத்தை வெடி வைத்து தகர்ப்போம்' என, ஆங்கிலேயர் மிரட்டினர். ஆட்சி, அதிகாரம் கைவிட்டு போனதற்கு கவலைப்படாத மருது சகோதரர்கள், கோபுரத்தை இழக்க தயாராக இல்லை.
எனவே, தங்கள் தலையை தந்து, ராஜகோபுரத்தை மீட்டனர். அதேபோலத் தான், தேர் செய்து, உயிர் தியாகம் செய்த, குப்பமுத்து ஆச்சாரியின் வரலாறும் உள்ளது.
ஒரு நாட்டின் மன்னன் தன் பதவியை விட, அதிகாரத்தை விட, சமயம் தான் பெரிது என நினைக்கிறான். ஒரு நாட்டின் கலைஞன், தன் உயிரை விட சமயம் தான் பெரிது என்று நினைக்கிறான். இதுதான் காலம் காலமாக நம் சமூகம் கடந்து வந்த சமயம் மற்றும் பக்தி நெறி.
எல்லா நிலையிலும், எது நம் சமயம் என்ற கேள்விக்கு, நால்வர் பெருமக்கள் விடை தந்துள்ளனர். விழிகளில் வழியும் கண்ணீரை துடைப்பதுதான் உண்மையான சமயம்; சைவ சமயம்.
இவ்வாறு அவர் பேசினார்.

