வங்க கடலில் பல மாற்றங்கள் பருவமழை விலகல் துவக்கம்
வங்க கடலில் பல மாற்றங்கள் பருவமழை விலகல் துவக்கம்
ADDED : செப் 24, 2024 04:47 AM

சென்னை : வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் சூழலில், சில மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை விலகத் துவங்கியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
மத்திய வங்கக்கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த 24 மணி நேரத்துக்குள், மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு அதிகரித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, தமிழகத்தில் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பலமான தரைக்காற்று, இடி, மின்ன லுடன் மிதமான மழை பெய்யலாம். இந்நிலை, 29ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்ன லுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரட்டி போட்டது
கடந்த ஜூன் முதல் வாரத்தில் துவங்கிய தென்மேற்கு பருவமழை, கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளை புரட்டி போட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் சூழலில், சில மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை விலகத் துவங்கியுள்ளது.
குறிப்பாக, மேற்கு ராஜஸ்தானில், 'காச்' என்ற இடத்தில் தென்மேற்கு பருவமழை விலகல் துவங்கியுள்ளது. இயல்பான நிலையில், 17ம் தேதி பருவமழை விலகி இருக்க வேண்டும்.
அதன் தொடர்ச்சியாக, மேற்கு ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, குஜராத் மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று விலகும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
8 நகரங்களில் சதம்
நேற்று மாலை நிலவரப்படி அதிகபட்சமாக, மதுரை விமான நிலைய பகுதியில், 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.5 டிகிரி செல்ஷியஸ்; மதுரை நகரில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
ஈரோடு, கரூர் பரமத்தி, நாகப்பட்டினம், தஞ்சை, திருச்சி, துாத்துக்குடி ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.

