ADDED : டிச 17, 2024 05:41 AM
சபரிமலை : புல்மேடு மற்றும் எருமேலி பாதைகளில் வரும் பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் நடத்துவதற்கு தனி வரிசை ஏற்படுத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார்.
அவர் கூறியதாவது: எருமேலியில் இருந்து அழுதை வழியாக பம்பை வரும் 30 கி.மீ. தூரமுள்ள பாதை, சத்திரத்திலிருந்து புல்மேடு வழியாக சன்னிதானம் வரும் 12 கி.மீ. தூரம் உள்ள பாதை அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ளது. பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்கள் சன்னிதானம் முன்புறத்தில் பிற பக்தர்களுடன் 18 படிகளில் ஏற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது இதை தவிர்ப்பதற்காக அவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்படும்.
எருமேலி பெருவழிப் பாதையில் வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து நீலிமலை வழியாகவோ அல்லது சுவாமி ஐயப்பன் ரோடு வழியாகவோ வர அனுமதி வழங்கப்படும். இவர்களை தனியாக அடையாளம் காண வனத்துறை சார்பில் 'டேக்' கட்டப்படும். மர கூட்டம் வரும் போது இவர்கள் சரங்குத்தி செல்ல விரும்பவில்லை எனில் சந்திராங்கதன் ரோடு வழியாக சன்னிதானத்துக்கு வரலாம். இதுபோல புல் மேடு வழியாக வரும் பக்தர்களுக்கும் வனத்துறை சார்பில் 'டேக்' கட்டப்படும். இவர்கள் பெரிய நடைப் பந்தல் வரும்போது பிற பக்தர்களுடன் காத்து நிற்காமல் தனி வரிசை ஏற்படுத்தப்படும். உடனடியாக இது அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்

