இளசுகளுக்கு பாடம் எடுத்தே ஆயுள் போகுது; தி.மு.க., மூத்த நிர்வாகிகள் 'புலம்பல்'
இளசுகளுக்கு பாடம் எடுத்தே ஆயுள் போகுது; தி.மு.க., மூத்த நிர்வாகிகள் 'புலம்பல்'
ADDED : ஆக 06, 2025 08:02 AM

கடுமையான நெருக்கடிக்கு இடையே ஆட்சியை பிடித்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்றதும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். தற்போது 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் நகர, ஊரக பகுதிகளில் தினசரி முகாம்களாக நடந்து வருகிறது.
இதற்கிடையே 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற திட்டம் குறித்து மக்களிடம் தீவிர பிரசாரம் செய்யப்படுகிறது. மேலும், தி.மு.க., மற்றும் இளைஞரணி, மாணவரணி என ஒவ்வொரு பிரிவாக ஆட்சியின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரம், பொதுக்கூட்டமாக நடத்தப்படுகிறது.
அதுபோல், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கையில் பொது மக்களிடம் ஓ.டி.பி., பெறக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்த நிலையில், முக்கிய நிர்வாகிகள் பலரும் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இப்படியாக மாவட்டத்தில், தினசரி மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளுங்கட்சி சேர்மன்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு கட்சிப்பணிகள் கடுமையாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால், புதிதாக பொறுப்புகள் பெற்ற இளைய தலைமுறை நிர்வாகிகள் பலரும், தினசரி இத்தனை வேலையா என நொந்து போகின்றனர்.
மாத சம்பளத்திற்கு செய்யும் வேலையை காட்டிலும் இது கூடுதலான பணி என புலம்புகின்றனர். ஒரு வார்டு அல்லது ஒரு கிளைக்குள் உள்ள நபர்களை எத்தனை முறை மீண்டும் மீண்டும் சந்திப்பது; ஆட்சியின் சாதனைகளை, திட்டங்களை மீண்டும் மீண்டும் எப்படி எடுத்துரைப்பது என மனசோர்வுடன் பலர் தயக்கம் காட்டுகின்றனர்.
இருப்பினும் தினசரி தலைமைக்கு தகவல் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் மூத்த நிர்வாகிகள் இருப்பதால், சோர்வடையும் இளைய நிர்வாகிகளை ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி பூஸ்ட் செய்கின்றனர்.
இதுபோன்ற நெருக்கடிகளால் இளசுகள் பலர் மொபைல் போனை சுவிட்ச் ஆப், நாட் ரீச்சபிள் மற்றும் எடுக்காமல் விடுவது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் புதிதாக பொறுப்புகள் வாங்கிய இளசுகளுக்கு தினசரி பாடம் எடுத்து ஆயுள் கரையுது எனவும், தலைமைக்கு சரியான தகவலும் தர முடியவில்லை என மூத்த நிர்வாகிகள் பலரும் புலம்பி வருகின்றனர்.

