'எம்.பி.,யை கண்டா வரச்சொல்லுங்க...': 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., நூதன பிரசாரம்
'எம்.பி.,யை கண்டா வரச்சொல்லுங்க...': 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., நூதன பிரசாரம்
UPDATED : பிப் 28, 2024 04:42 PM
ADDED : பிப் 28, 2024 06:45 AM

மதுரை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் உள்ள தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வியுடன் 'கண்டா வரச்சொல்லுங்க' என அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க, போஸ்டர்கள் ஒட்டி நுாதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க., ஏற்கனவே பிரசாரத்தை துவங்கிய நிலையில், பல்லடத்தில் நேற்று பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
அ.தி.மு.க., தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக பிரசாரம் துவங்கவில்லை என்றாலும், ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க., வின் விளம்பர பிரிவு, ஐ.டி., பிரிவு சார்பில் நேற்று தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 'கண்டா வரச்சொல்லுங்க' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் 'எங்க தொகுதி எம்.பி.,யை எங்கேயும் காணவில்லை' என மக்கள் கேட்பது போல் ஒட்டியுள்ளனர்.
'இது ஒரு வகையான நுாதன தேர்தல் பிரசாரம்தான்' என்கிறார் ஐ.டி., பிரிவு செயலாளர் ராஜ்சத்யன்.
அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க., எம்.பி.,க்களும், கூட்டணி கட்சி எம்.பி.,க்களும் தமிழகத்திற்கு தேவையான எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. உதாரணமாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., வெங்கடேசன் உயர்கோபுர விளக்குகள், நிழற்குடைகளை அமைத்துக்கொடுத்து சாதனையாக சொல்லி வருகிறார். தேர்தல் நெருங்குவதால் 'அதை செய்தேன், இதை செய்தேன்' என வெங்கடேசன் உட்பட எம்.பி.,க்கள் பலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்த போஸ்டரால் விழிப்புணர்வு அடைந்த பெண் ஒருவர், அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேள்வி கேட்டுள்ளார். இது ஆரம்பம்தான். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எங்கள் பிரசாரம் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

