சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 06, 2025 01:29 AM

சென்னை:சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இயக்கத்தின் மாநில பொதுச்செயலர் ராபர்ட் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 600க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்று, சம ஊதியம் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
குறைத்து நிர்ணயம்
பின், ராபர்ட் அளித்த பேட்டி:
கடந்த 2009ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஒரே பதவி, ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி இருந்த போதும், அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது.
எங்களுக்கு முன் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 8,370 ரூபாயும், எங்களுக்கு 5,200 ரூபாயும் அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த முரண்பாடு, தற்போது மாதத்திற்கு 27,000 ரூபாயாக உள்ளது. இதை களைய வலியுறுத்தி, கடந்த ஆட்சிக்காலத்தில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எங்களை சந்தித்து, 'தி.மு.க., ஆட்சி அமைக்கும் பட்சத்தில், 2-0,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.
மூன்று பேர் குழு
தி.மு.க., ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகளாகியும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். மாறாக, ஊதிய முரண்பாடு குறித்து விசாரணை மேற்கொள்ள, 2023ல் மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது.
மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக் கூறி, இரண்டு ஆண்டுகள் ஆகியும், இக்குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஊதிய முரண்பாட்டை எதிர்த்து போராடி வருகிறோம். ஒவ்வொரு போராட்டத்தின் போதும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், 'முதல் பிரச்னையாக இது தீர்க்கப்படும்' என்று கூறுகிறார்; எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே, தி.மு.க., தேர்தல் அறிக்கைப்படி, சம வேலைக்கு சம ஊதியம் என்பதை, வரும் மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டும்; இல்லையெனில், அடுத்தகட்டபோராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

