ஆர்.டி.ஓ., அலுவலக பணிகள் ஒருவாரமாக பாதிப்பு; சர்வர் பிரச்னை காரணமா
ஆர்.டி.ஓ., அலுவலக பணிகள் ஒருவாரமாக பாதிப்பு; சர்வர் பிரச்னை காரணமா
ADDED : பிப் 07, 2024 07:24 AM
மதுரை : வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளுக்காக (ஆர்.டி.ஓ.,) விண்ணப்பிப்பதில் 'இணையதள' பயன்பாட்டில் இடையூறாக உள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், அலுவலர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் டிரைவிங் லைசென்ஸ், வாகனங்கள் பதிவு, தகுதிச்சான்று உள்பட வாகனங்கள் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் 'ஆன்லைன்' மூலமே விண்ணப்பிக்க வேண்டும். சில நாட்களாக இப்பணிகளில் இடையூறு இருப்பதாக பொதுமக்களும், அலுவலர்களும் புலம்புகின்றனர். குறிப்பாக சில விண்ணப்பங்களை பதிவு செய்வது, கட்டணம் செலுத்துவது என பிரச்னை உள்ளதால் பணிகளை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் ராம்குமார் கூறுகையில், ''பிப்.1 முதல் இப்பிரச்னை உள்ளது. விண்ணப்பம் செய்வது முதல் டிரைவிங் லைசென்ஸ்களுக்கு போட்டோ எடுப்பது, கட்டணம் செலுத்துவது, வாகன பதிவு என எந்தப் பணிகளும் நடக்காததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை உடனே சரிசெய்ய வேண்டும்'' என்றார்.
இதுகுறித்து ஆர்.டி.ஓ., ஒருவர் கூறியதாவது: விண்ணப்பம் செய்வது தொடர்பாக சில மாவட்டங்களில் பிரச்னை எதுவும் எழுந்ததாக தெரியவில்லை. சில மாவட்டங்களில் இருந்து தேசிய தகவல் மையத்திற்கு சில பிரச்னைகள் உள்ளதாகவும், அதனை சரிசெய்து தரவேண்டும் எனவும் வாட்ஸ் ஆப் குரூப்பில் கேட்டு பதில் தெரிவித்துள்ளனர். சர்வர் பிரச்னை இருப்பதாகக் கூறவில்லை. குறிப்பிட்ட சில பிரச்னைகளைத்தான் தெரிவித்துள்ளனர். சேலம், விருதுநகர் மாவட்டங்களில் 'சாரதி' போர்ட்டல் வேலை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலளித்த சென்னை அதிகாரிகள், 'தற்காலிமாக பொதுமக்கள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., பணிகள் தடையின்றி நடக்கிறது என கூறியுள்ளனர். இது வழக்கமான 'அப்கிரேட்' பணிகள் நடப்பதால் இருக்கலாம் என்றார்.

