ஒரே நாளில் ரூ.272 கோடி வசூல் பதிவுத்துறை புதிய சாதனை
ஒரே நாளில் ரூ.272 கோடி வசூல் பதிவுத்துறை புதிய சாதனை
ADDED : மே 02, 2025 12:54 AM
தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில், பத்திரப்பதிவு வாயிலாக, 272.87 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முகூர்த்த நாட்களில், பத்திரப்பதிவு அதிகரிக்கும் என்பதால், கூடுதல் டோக்கன் அனுமதிக்கப்படும்.
அந்த வகையில் ஏப்ரல், 30ம் தேதி முகூர்த்த நாள் மற்றும் அட்ஷய திரிதியை என்பதால், கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டது. இதைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகின.
நேற்று முன்தினம் ஒரே நாளில், 27,440 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் வாயிலாக, 272.87 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன், 2024 - 25ம் நிதியாண்டில், பிப்., 10ல் ஒரே நாளில், 23,421 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, 237.98 கோடி ரூபாய் வசூலானது.
ஒருநாள் வசூலில் இதுவே அதிகம் என்றிருந்த நிலையில், அதை கடந்து நேற்று முன்தினம், 272.87 கோடி ரூபாய் வசூலானது புதிய சாதனையாகும்.

