ADDED : ஏப் 06, 2024 11:49 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ஐ உடைத்து ரூ.10 லட்சத்திற்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் சிப்காட் பகுதியில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. நேற்று( ஏப்.,05) மாலை, ஏடிஎம் மையத்தை பராமரிக்கும் ஊழியர்கள், ஏடிஎம் மையத்தில் ரூ.16 லட்சம் பணத்தை நிரப்பிச் சென்றனர். இன்று காலை அங்கு வந்த மர்ம நபர்கள், கண்காணிப்பு கேமரா மீது கருப்பு நிற ஸ்ப்ரேயை அடித்து, வெல்டிங் மிஷின் உதவியுடன் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து , அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
அதிகாலை 4 மணியளவில், ஏடிஎம் மையத்தை பராமரிக்கும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வந்த தகவலைத் தொடர்ந்து, கட்டட உரிமையாளர் வந்து பார்த்த போது ஏடிஎம்.ல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி., தங்கதுரை, ஏடிஎஸ்பி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இங்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

