திருவண்ணாமலை தீபத்திற்கு கட்டுப்பாடுகள்; மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருவண்ணாமலை தீபத்திற்கு கட்டுப்பாடுகள்; மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ADDED : டிச 12, 2024 01:15 AM
சென்னை: ''திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று, மலை மீது கொப்பரை, திரி, நெய் ஆகியவற்றை எடுத்து செல்லும் நபர்கள் தவிர, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல், யாரும் கோவில் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, அறநிலையத் துறை தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துாத்துக்குடி மாவட்டம், தேரிக்குடியிருப்பு, கற்குவேல் அய்யனார் கோவிலில் உள்ள பெரியாண்டவருக்கு, உபயதாரர் கொடுத்த, 12 கிலோ வெள்ளியில் உருவாக்கப்பட்ட கவசத்தை, அமைச்சர் சேகர்பாபு, கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு, மலை உச்சியில் தீபம் ஏற்றும் நிகழ்வு, எவ்விதத்திலும் தடைபடாது. இந்த ஆண்டு, 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மலையில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் சரவணவேல்ராஜ் உத்தரவின்படி, பேராசிரியர் பிரேமலதா தலைமையில், எட்டு பேர் குழு, மூன்று நாட்கள் கள ஆய்வு செய்தனர்.
அதன்படி, 350 கிலோ எடை கொண்ட கொப்பரை, திரிகள், தேவைக்கு ஏற்ப, 600 கிலோவிற்கு மேற்பட்ட நெய், மலை உச்சிக்கு எடுத்து செல்ல, சம்பந்தப்பட்ட நபர்கள், காவல், வனத் துறையினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி கிடையாது. பரணி தீபத்திற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பித்த, 500 பக்தர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள், அரசுத் துறை அலுவலர்கள், ஊடகவியலாளர்கள் என, 6,500 பேர் அனுமதிக்கப்படுவர்.
மாலை கோவில் வளாகத்தில், முக்கியப் பிரமுகர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள், அரசுத் துறை அலுவலர்கள், ஊடகவியலாளர்கள், காவல் துறையினர் 1,000 பேர் என, 11,600 பேர் அனுமதிக்கப்படுவர்.
இம்முறை சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல், எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. கோவிலில் ஆறு இடங்களில், 'கியூ.ஆர்., குறியீடு' உடன் கூடிய நுழைவாயில்கள் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

