ADDED : அக் 20, 2025 11:17 PM
ராமநாதபுரம்: தீபாவளி தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. இதனால் ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு முடிந்துள்ளது. இன்று (அக்.,21) சென்னை செல்ல தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றும் டிக்கெட் கிடைக்கவில்லை.
எனவே ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு பஸ்சில் செல்ல ரூ.1500 முதல் ரூ.3000 வரை கட்டணம் உள்ளது. ஒரு குடும்பம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ரூ.10 ஆயிரம் வேண்டும். எனவே ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்றனர்.

