'சோழர் காலத்ததாக இருந்தாலும் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுங்க!'
'சோழர் காலத்ததாக இருந்தாலும் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுங்க!'
ADDED : அக் 24, 2024 10:15 PM
சென்னை:'சோழர் காலத்தில் இருந்தே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவை அகற்றப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில், கோலடி ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக, ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.
அந்த செய்தி அடிப்படையில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, முதல் அமர்வு தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, இந்த விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த பகுதியில், 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், '20 ஆண்டுகள் இல்லை; சோழர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவை அகற்றப்பட வேண்டும்' என்றனர்.
மொத்தம், 162 ஏக்கரில் இருந்த ஏரி தற்போது, 112 ஏக்கரில் சுருங்கி விட்டதாகவும் கூறினர்.
அப்போது, பட்டா நிலத்தில் குடியிருப்புகள் கட்டியிருப்பதாகவும், அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றும், வழக்கறிஞர் கவுதமன் கோரினார்.
அதற்கு நீதிபதிகள், மழை காலத்தில் அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் பாதிக்கப்படுவர் என்பதை கருதியே, தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருப்பதாகவும், இவ்வழக்கில் அவர்களையும் இணைப்பதாகவும் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ, மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தை நியமித்த முதல் அமர்வு, விசாரணையை நவம்பர் 21க்கு தள்ளிவைத்தது.

