தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கம்!
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கம்!
UPDATED : டிச 20, 2025 10:41 AM
ADDED : டிச 20, 2025 12:10 AM

சென்னை: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வீடுதோறும் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இன்னும் சீராக இப்பணி நடந்திருந்தால், நீக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்., 27ல் துவங்கியது. முதல் கட்டமாக, வீடு வீடாக எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர்.
வெளியீடு
எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்புக்கு பின், தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
பின், அர்ச்சனா அளித்த பேட்டி:
வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணி கடந்த 14ம் தேதி முடிக்கப்பட்டது. மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடந்த அக்., 27ம் தேதியின்படி, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 6 கோடியே 41 லட்சத்து 14,587. தற்போது வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 43 லட்சத்து 76,755 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2 கோடியே 66 லட்சத்து 63,233 பெண்கள்; 2 கோடியே 77 லட்சத்து 6,332 ஆண்கள்; 7,191 மூன்றாம் பாலினத்தவர்; 4 லட்சத்து 19,355 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் கணக்கெடுப்பு பணியின்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் குறைந்தபட்சம் மூன்று முறை, வீடுதோறும் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.
இறந்தவர்கள் 26 லட்சத்து 94,672; இடம் பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் 66 லட்சத்து 44,881; ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 39,278 பேர் என, மொத்தம் 97 லட்சத்து 37,831 பேர், பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர்.

சரிபார்ப்பு
பட்டியலில், 2002, 2005ம் ஆண்டு விபரங்களை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை வாக்காளர் பதிவு அலுவலர்கள் சரிபார்த்து, ஆவணங்கள் ஏதேனும் தேவையெனில், மீண்டும் விபரம் கேட்கப்படும்; அதற்கான பணிகள் இனி துவங்கும்.
தமிழகத்தில் சோழிங்கநல்லுார், பல்லாவரம், ஆலந்துார் சட்டசபை தொகுதிகளில், அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து, எந்த பெயரையும் உடனே நீக்க முடியாது. அதற்கு வழிகாட்டுதல்கள் உள்ளன. அதன்படியே, பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
விண்ணப்ப படிவங்கள் பெற்றவர்களில், 12,000க்கும் அதிகமானோர் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுவரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், 5 லட்சத்து 19,277 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.



உங்கள் பெயர் உள்ளதா? இணையதளத்தில் பார்க்கலாம்!
* பொது மக்கள் தங்கள் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை, www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்
* பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்புக்கு படிவம் 6ஐ பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம். பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்போர், படிவம் 7, முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவற்றை வரும் ஜனவரி 18ம் தேதிக்குள் வழங்கலாம்.
* மேலும், www.elections.tn.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம். அவற்றை ஆய்வு செய்ய, 234 தேர்தல் அலுவலர்கள் மற்றும் 1,776 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளனர்
* பெயர் சேர்க்கப்படாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளவர்கள் பற்றிய ஓட்டுச்சாவடி வாரியான பட்டியல்கள், பொது மக்கள் பார்வைக்காக பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். தங்கள் பெயர் இடம்பெறாததற்கான காரணத்தை அறியலாம்
* இந்த பட்டியல்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியல், அடுத்த ஆண்டு பிப்., 17ம் தேதி வெளியாகிறது.

