பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கும் சம்பந்திகள்: சீமான் கிண்டல்
பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கும் சம்பந்திகள்: சீமான் கிண்டல்
ADDED : நவ 19, 2024 04:03 AM

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி:
இந்தியாவில் பா.ஜ., ஆளாத மாநிலங்களான ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன், டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் மத்திய அரசின் பல்வேறு ஏஜென்சிகள் மாறி மாறி சோதனை நடத்தும் நிலையில், தமிழகத்தில் மட்டும் நடப்பதில்லை.
தி.மு.க., தலைவராகவும், தமிழக முதல்வராகவும் இருக்கும் ஸ்டாலின் வீட்டுக்கோ, அவர் தொடர்புடைய இடங்களிலோ சோதனை நடத்தப்படுவதில்லை. அப்படியென்றால், கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரா ஸ்டாலின். அப்படியொரு துாய்மையான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறதா?
தி.மு.க., - பா.ஜ., என இரு கட்சித் தலைமைகளுக்கு இடையே, மறைமுகமான உடன்பாடு இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதைத்தான், தொடர்ந்து சொல்லி வருகிறேன். செலுத்த வேண்டியவர்களுக்கு சரியான அளவில் கப்பம் கட்டி வருகின்றனர். அதனால், முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சோதனைக்கு செல்ல மாட்டார்கள். துவக்கத்தில் மறைமுக உறவு இருந்தது. இப்போது அது வெளிப்படையான உறவாகி விட்டது. அதாவது நல்ல உறவு.
பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களும், அமைச்சர்களும், பிரதமர் மோடியை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டு, அழைப்புக்காக பல நாட்கள் காத்திருப்பதாக சொல்கின்றனர். அவர்கள் யாருமே அவ்வளவு எளிதாக பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை.
ஆனால், ஒரே நாளில் காலையில் முதல்வர் ஸ்டாலினை பிரதமர் சந்திக்கிறார். மாலையில், அவருடைய புதல்வரும் துணை முதல்வருமான உதயநிதியை சந்திக்கிறார். ஏதோ, பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கும் சம்பந்திகள் போல இரு தரப்பும் நடந்து கொள்கின்றனர். இப்ப சொல்லுங்க... இது நேரடி உறவு தானே.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் பா.ஜ., இருந்தது. அப்போது, அ.தி.மு.க., கட்சி நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடியை அழைத்துள்ளனர். ஆனால், அதற்கு மோடியோ, பா.ஜ., மூத்த தலைவர்களோ யாரும் வரவில்லை.
ஆனால், பா.ஜ., கூட்டணியில் தி.மு.க., இல்லை. இந்நிலையிலும், கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு, பிரதமர் மோடிக்கு பதிலாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்து கலந்து கொள்கிறார்; அவரே நாணயத்தை வெளியிடுகிறார்.
இதன் மூலம், பா.ஜ.,வுடன் யார் நெருக்கமான கூட்டணி வைத்துள்ளனர் என்பது, யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கேட்டால், நாங்கள் தான் சித்தாந்த ரீதியில் பா.ஜ.,வை எதிர்க்கும் ஒரே கட்சி என, தி.மு.க.,வினர் தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டி பெருமை கொள்வர்.
இதனால், அவர்களுக்குத்தான் பலனே தவிர, தமிழகத்துக்கு துளியும் பலன் கிடையாது.
இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர் -

