ஒரே இடத்தில் 3 ஆண்டாக பணி: பட்டியல் கேட்கிறது பதிவுத்துறை
ஒரே இடத்தில் 3 ஆண்டாக பணி: பட்டியல் கேட்கிறது பதிவுத்துறை
ADDED : செப் 15, 2025 01:30 AM

சென்னை: சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் பட்டியலை அனுப்ப, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, பத்திரப்பதிவு பணிகள் நடக்கின்றன. பணிகள் அதிகமாகும் அளவுக்கு, பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் உள்ளது.
அழுத்தம் இருப்பினும், பெரும்பாலான அலுவலகங்களில், உதவியாளர்கள், சார் - பதிவாளர்கள், பணியில் அதிக அலட்சியம் காட்டுவதாக புகார்கள் வருகின்றன.
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து, அறிக்கை அளிக்கும் சார் - பதிவாளர்கள் மட்டும், இடமாற்றம் செய்யப்படுகின்றனர். மேலதிகாரிகள் ஆசியுடன் செயல்படும், சார் - பதிவாளர்கள், உதவியாளர்கள் பலர், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக தொடர்கின்றனர். அவர்கள் மீதான புகார்களும் மூடி மறைக்கப் படுகின்றன.
இந்நிலையில், 'ஒரே இடத்தில் நீண்டகாலமாக பணியில் இருப்போரை மாற்ற வேண்டும்' என, பல்வேறு தரப்பில் இருந்து, பதிவுத்துறைக்கு அழுத்தம் வந்துள்ளது. இதனால், இது தொடர்பான விபரங்கள் திரட்டப்படுகின்றன.
இது குறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பதிவுத்துறையின் பணி விதிகளின்படி, ஒரு நபர் ஒரே அலுவலகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. அதே போன்று, ஒரே மண்டலத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது.
உத்தரவு ஆனால், உதவியாளர்கள், சார் - பதிவாளர், மாவட்ட பதிவாளர்கள் என, 1,000 பேர், ஒரே அலுவலகத்தில் பல ஆண்டுகளாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளன.
குறிப்பிட்ட சிலர், ஒரே இடத்தில், 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பது தெரிய வந்துள்ளது. இது போன்ற நபர்கள் குறித்த விபரங்களை பட்டியலாக அனுப்ப, அனைத்து டி.ஐ.ஜி.,க்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது.
அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வுக்கு பின், அவர்கள் மொத்தமாக மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.