ADDED : ஜூலை 11, 2025 02:15 AM
புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனுடன் மோதல் காரணமாக, இரண்டு நாட்களாக சட்டசபைக்கு செல்லாமல் இருந்த முதல்வர் ரங்கசாமியை, நேற்று பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சந்தித்து பேசினார்.
சந்திப்புக்கு பின் முதல்வர் ரங்கசாமி அளித்த பேட்டி:
வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் என்.ஆர்.காங்., - பா.ஜ., இணைந்து போட்டியிடுவது குறித்து இருவரும் பேசினோம். பா.ஜ.,வுக்கும், எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை. அரசு நிர்வாகத்தில் அடிக்கடி சிறு பிரச்னைகள் ஏற்படுவது இயற்கை தான். அந்த வகையில் தான், இப்போதும் ஒரு சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை பேசி சரி செய்துள்ளோம்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து எப்போது கிடைக்கிறதோ, அப்போது, இது மாதிரியான பிரச்னைகள் ஏற்படாது. பா.ஜ., கூட்டணியை விட்டு, வெளியேறினால், என்.ஆர்.காங்., சிக்கல்களை சந்திக்க நேரிடும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி போகிற போக்கில் கூறுகிறார். அப்படி எந்த சிக்கலும் எங்களுக்கு ஏற்படாது.
இவ்வாறு முதல்வர் கூறினார்.

