UPDATED : பிப் 21, 2024 08:34 AM
ADDED : பிப் 21, 2024 06:08 AM

ராமேஸ்வரம் : இலங்கையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வரை, 50 கி.மீ., நடைபயணம் புறப்பட்டனர். 15 கி.மீ., சென்ற நிலையில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் நடத்திய சமரச பேச்சால் நடைபயணத்தை ஒத்தி வைத்தனர்.
கடந்த 2ல், ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.
இவர்களை விடுவிக்கக் கோரி, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ராமநாதபுரம் கலெக்டரிடம் ஒப்படைக்க மீனவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நடை பயணம் புறப்பட்டனர். 15 கி.மீ., கடந்து பாம்பன் அக்காள்மடம் சென்ற போது கலெக்டர் விஷ்ணுசந்திரன், எஸ்.பி., சந்தீஷ் மீனவர்களை அழைத்து சமரசம் பேசினர்.
'மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறது. விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவர்' என கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை மீனவர்கள் ஒத்திவைத்தனர்.

