ராமநாதபுரம், காஞ்சி, ஈரோடு மூன்று மாவட்டங்களுக்கு பரிசு
ராமநாதபுரம், காஞ்சி, ஈரோடு மூன்று மாவட்டங்களுக்கு பரிசு
ADDED : மார் 08, 2024 10:36 PM
சென்னை:பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில், சிறப்பாக செயலாற்றிய மூன்று மாவட்டங்களுக்கு, 2024ம் ஆண்டுக்கான பதக்கங்களை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக, சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த, முதல் மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு முறையே, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள், பாராட்டு பத்திரங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளில், தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு பிறப்பு பாலின விகிதம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் உட்பட பல்வேறு காரணிகளை பரிசீலித்து, ராமநாதபுரம், காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அம்மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாக செயலாற்றி உள்ளதைப் பாராட்டி, ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரனுக்கு தங்கப்பதக்கம்; காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்விக்கு வெள்ளிப்பதக்கம்.
ஈரோடு கலெக்டர்களுக்கு வெண்கலப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன், சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன், கமிஷனர் அமுதவல்லி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

