போராட்டத்தை நிறுத்த மாட்டேன் தைலாபுரத்தில் ராமதாஸ் பேட்டி
போராட்டத்தை நிறுத்த மாட்டேன் தைலாபுரத்தில் ராமதாஸ் பேட்டி
ADDED : ஆக 15, 2025 05:29 AM
திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி:
சமூக வலைதளங்களில், என்னை பற்றி கேவலமாக பேசுபவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி பற்றி, ஒரு கும்பல் திட்டமிட்டு அவதுாறு தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.
இப்படியெல்லாம் செய்யத் துாண்டுபவர்கள் யார் என்பதும் எனக்குத் தெரியும். இதற்கெல்லாம் பயந்து கொண்டு, என்னுடைய பயணத்தை நான் நிறுத்தி விட மாட்டேன்.
மக்களுக்காக போராட வேண்டியது நிறைய உள்ளது. அவதுாறாக பேசும் பதர்களாக உள்ளவர்களுக்கு, மக்கள் தக்க பதில் அடி கொடுப்பார்கள். வழக்கறிஞர் பாலு போன்றவர்களுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைபோல், தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையும், சுங்கவரி கட்டணத்தை வசூல் செய்யப்போவதாக தகவல் வருகிறது. முதற்கட்டமாக வண்டலுார் - மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் சுங்க வரி கட்டணத்தை வசூலிப்ப தற்கு, தனியாரிடம் விட முடிவு செய்துள்ளது.
இதேபோல் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியாரிடம் கொடுப்பதற்காக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது சரியான அணுகுமுறை அல்ல. மாநில புறவழிச்சாலையை, தனியார் சுங்க கட்டணத்திற்கு விடக்கூடாது.
ஏற்கனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் சுங்க வரி கட்டணம் வசூலிக்கும் போக்கால், மக்களுக்கு அதிக பாதிப்பு இருக்கிறது என்று சொல்லி, அதை எதிர்த்து வரும் நிலையில், அதே அணுகுமுறையை தமிழக அரசும் மேற்கொள்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

