குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்ப்பது தாயின் புனிதமான பொறுப்பு: ஐகோர்ட் கருத்து
குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்ப்பது தாயின் புனிதமான பொறுப்பு: ஐகோர்ட் கருத்து
ADDED : டிச 27, 2025 08:25 PM

சென்னை: 'ஒழுக்கத்துடன் குழந்தைகளை வளர்க்கும் புனிதமான பொறுப்பை, தாய் கைவிட்டு விட்டால், அது குடும்பம் மற்றும் சமூகத்தின் அடித்தளத்தை வீழ்த்தி விடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், கணவரை பிரிந்து, 14 வயதான மகளுடன் வசித்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நபருடன், திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். கடந்த, 2017ல், அந்த 14 வயது சிறுமியை, தாயின் காதலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, தாயிடம் சிறுமி புகார் தெரிவித்தபோது, 'வெளியில் சொன்னால் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என தாய் மிரட்டியுள்ளார்.
இதன் பின்னும் தொடர்ந்து சிறுமிக்கு, அந்நபர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், தாயை பிரிந்து தந்தையிடம் சென்று, அச்சிறுமி முறையிட்டார். பின், சிறுமி அளித்த புகாரில், தாய் மீதும், அவரது காதலர் மீதும், கோவை மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம், சிறுமியின் தாய்க்கும், காதலருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, 2020ல் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த் து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி காவல் துறை நிரூபித்துள்ளது. ஆயுள் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை' எனக் கூறி, மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், தனது உத்தரவில், 'நம் கலாசாரத்தில், தந்தை, ஆசிரியர், தெய்வம் ஆகியோருக்கு மேலாக, தாய் முதலிடத்தில் உள்ளார். ஒரு தாயின் முக்கிய கடமை, குழந்தைகளை பாதுகாப்புடன், ஒழுக்கத்துடன் வளர்ப்பது. புனிதமான இந்த கடமையை கைவிட்டு விட்டால், அது குடும்பம் மற்றும் சமூகத்தின் அடித்தளத்தை வீழ்த்தி விடும்' என, நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

