மே 2, 6ல் ரயில்வே உதவி லோகோ பைலட் மறுதேர்வு *இம்முறையாவது தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்படுமா
மே 2, 6ல் ரயில்வே உதவி லோகோ பைலட் மறுதேர்வு *இம்முறையாவது தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்படுமா
ADDED : ஏப் 10, 2025 01:37 AM
விருதுநகர்,:ரயில்வே உதவி லோகோ பைலட் 2ம் கட்ட மறுதேர்வு மே 2, 6ல் நடத்தப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இம்முறையாவது தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்படுமா என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரயில்வே துறையில் நாடு முழுவதும் உள்ள உதவி லோகோ பைலட்டிற்கான 18,799 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு ஜனவரியில் ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. நவம்பரில் முதற்கட்ட தேர்வு நடந்தது. சென்னை வாரியத்திற்குட்பட்ட 493 காலிப் பணியிடங்களுக்கு 6,315 பேர் தேர்வாகினர். மார்ச் 19, 20ல் இரண்டாம் கட்டத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு ‛ஹால் டிக்கெட்' வெளியானது.
அதில் பெரும்பாலான தேர்வர்களுக்கு தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் தமிழகத்தில் மையம் ஒதுக்கக்கோரி தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
ஒரே ‛ஷிப்ட்'டில் தேர்வு நடத்தப்படுவதால் தவிர்க்க முடியாத நிலையில் வேறு மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் விளக்கமளித்தது. இதையடுத்து பயணச் செலவு, தங்குமிடம், உணவு உள்ளிட்ட செலவுகளையும் பொருட்படுத்தாமல் வெளிமாநில தேர்வு மையங்களுக்கு ஆயிரக்கணக்கான தமிழகத் தேர்வர்கள் சென்றனர்.
ஆனால் நாடு முழுதும் சர்வர் பிரச்னை காரணமாக 2ம் கட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தேர்வு நாளன்று (மார்ச் 19) திடீரென அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தமிழக தேர்வர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தற்போது அந்த தேர்வு மே 2, 6ல் நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நாளுக்கு 10 நாட்களுக்கு முன்னர் தேர்வு மையம் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்படும் எனவும், 4 நாட்களுக்கு முன்னர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரூ. 6 ஆயிரம் வரை செலவு செய்து ஏமாற்றத்துடன் திரும்பிய தேர்வர்கள் இம்முறையாவது தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ‛‛இத்தேர்வில் தான் எங்கள் எதிர்காலம் அடங்கியுள்ளது. ஏற்கனவே தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பொருட்செலவு அதிகம் ஏற்பட்டு மன உளைச்சலில் உள்ளோம். எனவே தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும். வெளிமாநிலங்களில் ஒதுக்கினால் அதற்கான பயணச் செலவை அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமின்றி ரயில்வே வாரியம் திரும்ப வழங்க வேண்டும்'', என்றனர்.

