'இப்படியும் ஆளுங்க இருக்கீங்களா?' ஆச்சரியமாக கேட்ட அமைச்சர் மதிவேந்தன்
'இப்படியும் ஆளுங்க இருக்கீங்களா?' ஆச்சரியமாக கேட்ட அமைச்சர் மதிவேந்தன்
UPDATED : மே 16, 2025 01:46 AM
ADDED : மே 16, 2025 01:45 AM

சென்னை : ஈரோடு மாவட்டம், கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப் பகுதிகளில் வசித்து வரும் 35,000க்கும் மேற்பட்ட மலையாளி சமூகத்தினர், பட்டியலின பழங்குடி பிரிவில் சேர்க்கப்படாததால், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என, அனைத்து நிலைகளிலும் பின்தங்கி உள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, இச்சமூக மக்கள் போராடி வருவதாக, தமிழ்நாடு செடியுல்டு ட்ரைப் மலையாளி பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பேரவை ஒருங்கிணைப்பாளர் முருகன் கூறியதாவது: தர்மபுரி, சேலம், திருச்சி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், மலையாளி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மலையாளம் பேசக்கூடிய கேரளாவைச் சேர்ந்தவர்கள் அல்ல.
காலங்காலமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்ட மலைப்பகுதிகளில் வாழக்கூடியவர்கள். இவர்களில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், அந்தியூர் வட்டங்களில் அமைந்துள்ள கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப் பகுதிகளில் வசிக்கும் மலையாளி சமூகத்தினர் தவிர, இதர மாவட்டங்களில் வசிப்போர், பழங்குடியினர் என, அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மலையாளிகள் மட்டும், பழங்குடியினர் என அங்கீகரிக்கப்படவில்லை. இம்மக்களின் நீண்ட கால கோரிக்கை, இவர்களை பட்டியலின பழங்குடி பிரிவில் சேர்ப்பதுதான். ஆனால், மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால், இம்மக்கள் ஜாதி சான்றிதழ் பெற முடியாமல், அரசின் அனைத்து நலத்திட்டங்களில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2022 முதல், 3,500க்கும் மேற்பட்ட மாணவர்கள், மலையாளிப் பழங்குடி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தும், கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக, தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளை கேட்டால், தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதங்களை அனுப்பி வருவதாக கூறுகின்றனர்.
ஆனால், மத்திய அமைச்சர்கள் கூறுகையில், 'பட்டியலின பழங்குடிகளில் சேர்ப்பது, நீக்குவது தொடர்பான பரிந்துரையை, மாநில அரசே மேற்கொள்ள வேண்டும். துறை அமைச்சர்கள் வெளியிடும் அரசாணை அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்' என்கின்றனர்.
இதுகுறித்து, அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து பேசியபோது, 'இப்படியொரு மலையாளி சமூகம் இருப்பதே தெரியாது; இப்போது தான் கேள்விப்படுகிறேன்' என்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.