மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறை தீர்வுக்கு கியூ.ஆர்., குறியீடு
மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறை தீர்வுக்கு கியூ.ஆர்., குறியீடு
ADDED : டிச 20, 2025 06:29 AM

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், குறை தீர்ப்பதற்காக, கியூ.ஆர்., குறியீடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு மாதந்தோறும், 1.13 கோடி மகளிருக்கு, 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, 2023 செப்டம்பர் முதல் செயல்படுத்தி வருகிறது. புதிய பயனாளிகளை சேர்க்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் வாயிலாக மனுக்கள் பெறப்பட்டன.
புதிதாக திட்டத்தில் சேர, 28 லட்சம் பேர் மனு அளித்தனர். அதில், 16.9 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு, திட்டம் இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்ட பயனாளிகள் எண்ணிக்கை, 1.30 கோடியாக அதிகரித்துள்ளது.
மனு அளித்தும், தகுதியான ஆவணங்கள் சமர்ப்பித்தும், பலருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை. இதனால், ஆளுங்கட்சி ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மகளிரும், அவர்களது குடும்பத்தினரும் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, தகுதியுள்ள பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, முறையீடு செய்வதற்கு, கியூ.ஆர்., குறியீடு மற்றும் https://tnega.org/kmut-grivance என்ற இணையதள இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதில், குறை தெரிவிப்பவர்கள், தங்களது பெயர், குடும்ப தலைவர் பெயர், மொபைல் போன் எண், ரேஷன் அட்டை எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இதை தொடர்ந்து புகார் தெரிவிப்பவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு ரகசிய குறியீடு எண் அனுப்பப்படும்.
பின், தங்களது குறையை புகாராக பதிவு செய்ய, விண்ணப்பதாரர்களுக்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. 'ஆன்லைன்' வாயிலாக புகாரை பதிவு செய்த பின், வருவாய் கோட்டாட்சியர் வாயிலாக, அவை சரிபார்க்கப்பட உள்ளன.
இதையடுத்து, தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிகிறது.

