பொதுப்பணித்துறை பசுமை கட்டடம் ரூ.23 கோடியில் சென்னையில் திறப்பு
பொதுப்பணித்துறை பசுமை கட்டடம் ரூ.23 கோடியில் சென்னையில் திறப்பு
ADDED : பிப் 03, 2024 12:37 AM

சென்னை:சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு, 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பசுமை கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. அக்கட்டடத்தை, அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.
சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம், 1860ம் ஆண்டு கட்டப்பட்ட பாரம்பரிய கட்டடத்தில் இயங்கி வருகிறது.
பொதுப்பணித்துறை வாயிலாக, பல்வேறு அரசு துறைகளுக்கு கட்டடம் கட்டப்படுவதால், அதற்கு தேவையான பணிகளை மேற்கொள்வதற்கு, கூடுதல் வசதிகள் தேவைப்படுகின்றன.
எனவே, இடநெருக்கடியில் இயங்கி வந்த சென்னை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு, புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, 23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதிக ஜன்னல்கள், விசாலமான நடைபாதை, படிகள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன், பசுமை கட்டடமாக கட்டப்பட்டுள்ளது.
இதில் விரைவில், சூரிய சக்தி மின்சார வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த கட்டடத்தை, பொதுப்பணித்துறை அமைச்சர்எ.வ.வேலு முன்னிலையில், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
பொதுப்பணித் துறை செயலர் சந்திரமோகன், முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, சென்னைமண்டல தலைமை பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

