ADDED : டிச 16, 2025 07:01 AM

சென்னை: 'ஆதார்' இணையதளத்தில், பயனாளிகள் சேவை பெற, கடந்த சில நாட்களாக சிக்கல் ஏற்படுவது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கி கணக்கு துவங்க, காஸ் சிலிண்டர், மொபைல் போன் எண் இணைப்பு பெற என, பெரும்பாலான சேவைகளுக்கும், மத்திய, மாநில அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறவும், ஆதார் அவசியம். எனவே, ஆதார் எண் பெறவும், ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரி மாற்றவும், ஆங்காங்கே ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அங்கு சென்று உரிய கட்டணம் செலுத்தி, ஆதார் சேவையை பெறலாம். நம் விண்ணப்பத்தின் நிலையை, ஆதார் இணையதளமான, uidai.gov.in வழியே அறிந்து கொள்ள முடியும். ஆனால், கடந்த சில நாட்களாக, தனி பயனாளர் சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இணையதளம் உள்ளே செல்ல முடிவதுஇல்லை.
இதனால், பொதுமக்கள் தங்கள் விண்ணப்ப நிலையை அறிய, மீண்டும் ஆதார் மையம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இது குறித்து, பொதுமக்கள் சிலர் கூறியதாவது: ஆதாரில் பெயர் மற்றும் முகவரி பிழையாக இருந்தது. அதை சரிசெய்ய, ஆதார் மையத்தில் கடந்த 3ம் தேதி நேரில் சென்று விண்ணப்பித்தேன்.
இதன் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள, இணையதளத்திற்கு சென்றால் அது சரியாக செயல்படவில்லை. 10 நிமிடங்கள் காத்திருந்தும் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை.
சில மணி நேரம் கழித்து முயற்சித்தபோது, 'கேட்வே டைம் அவுட்' என குறியீடு வந்தது. தொடர்ந்து முயற்சித்தும் இதே நிலை தான். அத்தியாவசிய ஆதார் இணையதளத்தில், அடிக்கடி இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

