தமிழகத்திற்கு எதையும் செய்யாத பிரதமர்: எந்த சாதனையை சொல்லி தமிழகம் வந்தார் ? மதுரையில் ஸ்டாலின் பேச்சு
தமிழகத்திற்கு எதையும் செய்யாத பிரதமர்: எந்த சாதனையை சொல்லி தமிழகம் வந்தார் ? மதுரையில் ஸ்டாலின் பேச்சு
UPDATED : ஏப் 09, 2024 08:15 PM
ADDED : ஏப் 09, 2024 07:41 PM

மதுரை:
தமிழகத்திற்கு எதையும் செய்யாத பிரதமர் மோடி, எந்த சாதனையை சொல்லி
தமிழகம் வந்துள்ளார் என மதுரை தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர்
ஸ்டாலின் பேசினார்.
ஏழுகட்டங்களாக நடைபெற உள்ள லோக்சபா
தேர்தலில் தமிழகம்- புதுச்சேரிக்கு ஏப். 19-ல் லோக்சபா தேர்தல்
நடைபெறுவதையொட்டி, தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து
பிரசாரம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை லோக்சபா தொகுதி
கம்யூ.,வேட்பாளர் சு. வெங்கடேசன், சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளர்
கார்த்தி சிதம்பரம், ஆகியோரை ஆதரித்து மதுரை வண்டியூர் அருகே கலைஞர்
திடலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது,
மணிப்பூர் சென்றாரா ?
கடந்த
10 ஆண்டுகளில் நாட்டை ஆண்ட பிரதமர் மோடி எந்த திட்டத்தையும்
தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. தமிழகத்திற்கு எதையும் செய்யாத பிரதமர்
எந்த முகத்துடன் இப்போது தமிழகம் வருகிறார் ? எந்த சாதனையை சொல்லி
தமிழகம் வருகிறார்.
பெண் சக்தி பேசும் பிரதமர், மணிப்பூர் பெண்கள்
அவமதிக்கப்பட்ட போதும், பெண் மல்யுத்த வீராங்கனைகள் டில்லியில் கண்ணீர்
விட்டு போராடிய போதும் வாய்திறக்காதது ஏன்? மணிப்பூருக்கு ஒருமுறையாவது
சென்றாரா? குஜராத்தில் பில்கிஸ்பானு வழக்கு, காஷ்மீரில் சிறுமி வன்கொடுமை
செய்யப்பட்ட போது பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருந்தார். எனவே
பிரதமர் மோடியின் ஆட்சி காட்டாட்சி.
மகளிர் உரிமை திட்டம் தாய்வீட்டு சீதனம்
மதுரைக்கு
எய்ம்ஸ் மருத்துவமனையை கூட கட்டிதராமல் செய்த பா.ஜ., மலிவான அரசியல்
செய்கிறது. மதவாத கொள்கையால் நம் நாட்டை நூற்றாண்டுக்கு பின்னோக்கி
இழுத்து சென்றுவிட்டது மட்டுமல்ல ஈடி, சி.பி.ஐ., வைத்து அரசியல் செய்கிறது
பா.ஜ., அரசு .
கடந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை
தமிழகத்திற்கு கொண்டு வந்து உங்கள் முன்னால் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
பள்ளிகளில் காலை உணவு திட்டத்தால் 16 லட்சம் குழந்தைகள் பயன் அடைந்து
வருகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தால் 1.16 கோடி பெண்கள் பயன் பெற்று
தங்கள் தாய்வீட்டு சீதனமாக நினைக்கின்றனர்.
மதுரையில் கலைஞர்
நூற்றாண்டு நூலகம் கட்டியது தி.மு.க., ஆட்சி. திராவிட மாடல் அரசு
கல்விக்கான திட்டங்களை பார்த்து பார்த்து உருவாக்குகிறது. இப்படி தி.மு.க,
அரசு கொண்டு வந்த திட்டங்களை பட்டியல் போட்டால் ஒரு நாள் போதாது.
‛பி' டீம் பழனிசாமி
கடந்த
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த தி.மு.க., விவசாயிகளின் 65
ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. தி.மு.க, ஆட்சியில் 1556
கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. பா.ஜ.வின் ‛‛பி''டீமாக
செயல்பட்டு வரும் பழனிசாமி தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்.
எனவே
கடந்த தேர்தலைவிட வரும் லோக்சபா தேர்தலில் சு. வெங்கடேசனையும்,
கார்த்தி சிதம்பரத்தையும் கூடுதல் வாக்குகளை பெற்று நீங்கள் வெற்றி பெற
செய்ய வேண்டும். ஜனநாயகவாதி ஒருவரை நீங்கள் பிரதமராக்க வேண்டும். சமூக
நீதி மீது அக்கறை கொண்ட ஒருவரை வரும் தேர்தலில் நீங்கள் பிரதமராக தேர்வு
செய்ய வேண்டும். நீங்கள் அளிக்கும் வாக்கு சமூகநீதியை காக்கும். இந்தியா
கூட்டணி பிரதமர் , ஜனநாயகத்தின் மான்பை காக்கும் பிரதமராக இருப்பார்.
நாற்பது நமதே. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

