தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை பிரதமர் கொண்டு வந்துள்ளார்: நிர்மலா சீதாராமன் பேச்சு
தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை பிரதமர் கொண்டு வந்துள்ளார்: நிர்மலா சீதாராமன் பேச்சு
ADDED : ஏப் 12, 2024 12:11 PM

ஒசூர்: ‛‛ தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் '', என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
கிருஷ்ணகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ஒசூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், திமுக.,வைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணகிரி பற்றியோ, ஒசூரை பற்றியோ பார்லிமென்டில் பேசினார்களா என்பது பெரிய கேள்விக்குறி. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், மத்திய பா.ஜ., அரசு பலவித திட்டங்கள் மூலமாக மக்களுக்கு ஏராளமான நல்ல விஷயங்கள் செய்துள்ளது.
முத்ரா திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.5,427 கோடி வழங்கப்பட்டு உள்ளது. 80 கோடி ஏழைகளுக்கு அடுத்த 5 வருடம் வரை கோதுமை, அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கோவிட் காலம் முதல் இதனை கொடுக்க ஆரம்பித்தோம். முதியோருக்கு பென்சன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 4,096 பேர் பயன்பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 2.75 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 18,600 பேருக்கும், நகர்ப்புறத்தில் 7,460 பேருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2.35 லட்சம் குடும்பங்கள் பலன்பெற்றுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் ஒசூரில் தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. ஒசூரில் ராணுவ தளவாடங்கள் காரணமாக பல நன்மைகள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.
போதைப் பொருட்களை கூட இறக்குமதி செய்து, நமது இளைஞர் வாழ்க்கையை பாழாக்கும் குடும்பத்தை மீண்டும் தேர்வு செய்யக்கூடாது. அந்த குடும்பத்தோடு தான் ஜாபர் சாதிக் நேரடி தொடர்பு வைத்து இருந்தார் என பல ஆதாரங்கள் உள்ளன. போதைமூலமாக வரக்கூடிய ஆதாயத்தில் பிழைக்கக்கூடிய எந்த குடும்பமும் வாழ்ந்தது இல்லை. போதைப்பொருளை வைத்துக் கொண்டு ஆதாயத்திற்காக அரசியல் செய்யும் குடும்பத்தை நிராகரிக்க வேண்டும். தமிழகத்திற்கு போதை வேண்டாம். திமுக.,வை நிராகரிக்க வேண்டும். உதயம் தமிழகத்திற்கு இல்லை. அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் தான். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

